கோவை போலீஸ் கமிஷனராக சைலேந்திரபாபு நியமனம்
சென்னை: கோவை மாநகர காவல்துறை ஆணையராக ஐஜி சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கவுள்ள நிலையில் இந்த முக்கியப் பதவியில் பாபு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகர காவல்துறையில் கூடுதல் ஆணையராக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இருந்தவர் சைலேந்திரபாபு. ஆட்சி மாறியதும் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். பல்வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட அவர் தற்போது அதிரடிப்படைத் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கோவை காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு இப்பதவியில் சிவனாண்டி இருந்து வந்தார். அவர் தற்போது மேற்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த இடத்தில், சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் மிகச் சிறந்த, நேர்மையான காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் சைலேந்திர பாபு என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு-கருணாநிதி அறிவுரை:
இந் நிலையில் கோவையில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய கருணாநிதி, இது போன்ற பெருங்கூட்டங்களில் பாதுகாப்புப் பணி எந்த அளவுக்கு தேவையானது என்பதையும், இது போன்ற பெரும் கூட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு தவறுகளைச் செய்வோர், தீய செயல்களில் ஈடுபடுவோர், திருட்டுக் குற்றங்களுக்கு ஆட்படுவோர்- இவர்கள் எல்லாம் இந்த நேரத்தைத்தான் தங்களுக்கு உகந்த நேரமாகக் கருதுவார்கள். ஆகவே, இதிலே சிறிதளவும் ஏமாந்து விடாமல், காவல் துறையினர் கண்காணிப்போடு இருந்திட வேண்டும்.
மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்குபெறப் போகும் தமிழ் அறிஞர்களின் தங்குமிட வசதி, போக்குவரத்து வசதி, உணவு உள்ளிட்ட விருந்தோம்பலுக்கு உயர்முக்கியத்துவம் அளித்திட வேண்டுமென்றும், அதில் எவ்விதக் குறைபாடும், எந்தவொரு நாட்டு தமிழ் அறிஞரிடமிருந்தும் வந்துவிடக் கூடாது என்பதில் அனைவரும் கண்ணுங்கருத்துமாக கவனம் செலுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மாநாடு தொடர்பாக கோவை மாநகரில் நடைபெற்று வரும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தொடர்பானவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் உயர்ந்த தரத்தை உறுதி செய்திட வேண்டுமென்று விரும்புகிறேன்.
மாநாட்டுக்கு இதுவரையிலே இருந்த இடைவெளி மாதக்கணக்கில் இருந்தது - பின்னர் வாரக் கணக்கில் இருந்து - இப்போது நாட் கணக்கிலே வந்திருக்கிறது. ஆகவே, மிகக் குறுகிய காலத்தில் நிறைய பணிகளை நாம் ஆற்ற வேண்டியிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இன்னொன்று- வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் மாத்திரமல்ல, நம்முடைய நாட்டிலே இருக்கின்ற அறிஞர் பெருமக்கள், பொதுமக்கள்- மாநாட்டுக்கு வருகின்ற நேரத்தில், அவர்களிடத்திலே மரியாதையோடு நடந்து கொள்கின்ற அந்தப் பண்பாட்டை இந்த மாநாட்டுக்காக நியமிக்கப்படுகின்ற தொண்டர்கள் பின்பற்ற வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications