கேரளா-சாமி வரவேற்பு: நெடுமாறன், ராமதாஸ் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை இழுத்தடித்து காலம் கடத்த வேண்டும் என்று கேரள அரசு மேற்கொண்ட தந்திரம் வென்றுவிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவரும் முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இந்த அணை பலமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி ஆனந்த் தலைமையில் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் ஆகியவற்றுக்கு தமிழக விவசாயிகள் தரப்பின் நியாயத்தை எடுத்துக் கூறி நீதி கிடைக்கச் செய்வதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என்பதையே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காட்டுகிறது.

1979ம் ஆண்டில் இருந்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு கேரளம் பல வகையிலும் முட்டுக்கட்டை போடும் முயற்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி பெற்றே வந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 27-02-2006ம் தேதி நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என இறுதித் தீர்ப்பு அளித்தது.

ஆனால், இதை கேரள அரசு ஏற்க மறுத்ததுடன், கேரள நீர்ப்பாசனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து இத் தீர்ப்பை செல்லாததாக்க முயற்சி செய்தது.

கேரளத்தின் சட்டத் திருத்தம் அரசியல் சட்டப்படி செல்லாது என தமிழகம் தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் 3 ஆண்டு காலமாக விசாரித்து தீர்ப்புக் கூறப்போகும் கட்டத்தில் இது அரசியல் சட்டப் பிரச்சனை என்பதால், அரசியல் சட்ட பெஞ்ச் தான் இதை விசாரிக்க வேண்டும் என்று கேரளம் திசை திருப்பியது.

இதை ஓராண்டு காலமாக விசாரித்த உச்ச நீதிமன்றம் கேரளத்தின் காலங்கடத்தும் தந்திரத்திற்கு இடமளிக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் தமிழக விவசாயிகளுக்குத் தேவைப்படும் நீரின் அளவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய ஐந்து பேர் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே 1979ல் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் கே.சி. தாமஸ் தலைமையில் ஒரு குழுவும், 2000ம் ஆண்டில் மத்திய அரசு நியமித்த பி.கே. மிட்டல் தலைமையிலான வல்லுநர் குழுவும் ஆய்வு செய்து, அணை மிக்க பலமாக இருப்பதை உறுதி செய்துவிட்டன. கேரளம் எழுப்பிய 12 பிரச்னைகளையும் ஆதாரமற்றவை எனவும் நிராகரித்தன.

மத்திய மண்ணியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த நிபுணர்களும் ஆய்வு செய்து அணை பலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்தார்கள்.

இந்தக் குழுக்கள் அனைத்தும் அளித்த அறிவுரைகளை ஏற்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையில் கூடிய நீதிபதிகளின் பெஞ்ச், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என தீட்டவட்டமான தீர்ப்பை அளித்தது.

அதன் பிறகு மீண்டும் அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆராய இப்போது மீண்டும் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைப்பது தேவையற்றது.

இது நீண்ட காலமாக தமிழகத்திற்கு கேரளம் இழைத்து வரும் அநீதியை நீக்குவதற்குப் பதிலாக, மேலும் அநீதி இழைப்பதாகும். இவ்வாறு நெடுமாறன் கூறியுள்ளார்.

தமிழகத்தை நீதிமன்றமும் கைவிட்டுவிட்டதோ-ராமதாஸ்?:

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்வதற்கு புதிதாக ஒரு ஐவர் குழுவை அமைப்பது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தை உச்ச நீதிமன்றமும் கைவிட்டுவிட்டதோ என்ற எண்ணத்தை இது ஏற்படுத்துகிறது.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கடந்த 2006ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த கேரள அரசை தமிழகம் வலியுறுத்தி வரும் நிலையில், புதிதாக ஒரு குழுவை நியமிப்பது என்ற அறிவிப்பு தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அணையின் பாதுகாப்பு குறித்து தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 7 பேர் அடங்கிய குழு, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் 2006ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

ஆனால், இதற்கு கட்டுப்பட கேரள அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. புதிய அணை கட்டவும் முயற்சித்து வருகிறது. தொடர் முட்டுக்கட்டையால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வறண்ட நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. கேரள அரசின் இந்த முட்டுக்கட்டையைப் போக்க வழிமுறைகள் என்ன?
என்பது குறித்து சிந்திக்க வேண்டிய நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

இதற்கான வழியைக் காண அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, தமிழக அரசு விவாதிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

கேரளா-சுப்பிரமணிய சாமி வரவேற்பு:

இது குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் நிருபர்களிடம் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை மூலம், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு எழுப்பியுள்ள பிரச்சனைகள் தொடர்பாக மேலும் பல ஆதாரங்களை தாக்கல் செய்ய முடியும் என்றார்.

அதே போல ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக 5 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டதை வரவேற்கிறேன்.

எனது மனுவின் மீதான விசாரணைக்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த உச்ச நீதிமன்றம் 2006ம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால், அதைச் செயல்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது.

அந்தத் தீர்ப்பை செல்லாததாக ஆக்கிட கேரள அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு எதிரான இந்த வழக்கில் மனுதாரராக சேர்த்துக் கொள்ள சில தினங்களுக்கு முன்பு நான் அரசியல் சட்ட பெஞ்சில் மனு செய்திருக்கிறேன்.

இப்போதிருந்து இந்த வழக்கை நான் கவனமாகப் பின்தொடர்ந்து, தமிழக மக்களுக்கு நீதி கிடைக்க மறுபடி போராடுவேன்.

இதன் முதல்கட்டமாக மேலூரில் இருந்து திருப்பரங்குன்றம் வரையில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் பாதயாத்திரை செல்லவிருக்கிறேன் என சுவாமி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+