நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் துவக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் வரும் கோவளம் பகுதிக்கு அருகே அமைக்கப்படும் இந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
மத்திய அரசு நிறுவனமான மெகான், சுவிஸ் நாட்டு நிறுவனமான அடிகோ ஆகியவை இணைந்து இந்த நிலையத்தை அமைக்கின்றன.
இதற்காக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்துசமய அறநிலையத் துறைக்கு மாதம் ரூ. 1.12 லட்சத்தை அரசு செலுத்தும்.
2011ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டம் முடிவடைந்து சென்னை நகருக்கு இந்தக் குடிநீர் கிடைக்க ஆரம்பிக்கும். நெமிலியி்ல் இருந்து 40 கிலோ மீட்டர் தூரம் குழாய் அமைக்கப்பட்டு சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படும்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி ஜே.பி.சி. எந்திரத்தை இயக்கி திட்டப் பணியை துவக்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தத் திட்டத்துக்கு கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசு ரூ.1,000 கோடி ஒப்புதல் அளித்தும் கூட அப்போதைய அதிமுக அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2006ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதும், மத்திய அரசிடம் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்து தற்போது பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் அளவுக்கு கடல் நீர் இங்கு குடிநீராக்க மாற்றப்படும். வரும் 2011ம் ஆண்டு டிசம்பரில் இந்தப் பணிகள் முடிவடையும்.
இதேபோல மீஞ்சூரில் இப்போது நடைபெற்று வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கடந்த 2004ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்று நாங்கள் விட்டுவிடவில்லை.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தொடர்ந்து அங்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது 98 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. 2010 மார்ச்சில் மீஞ்சூரில் இருந்து சென்னைக்கு குடிநீர் வரும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications