ரூ. 3 முதல் ரூ. 5 லட்சம் வரை ஆண்டு ஊதியம் பெறுவோருக்கு வரி சலுகை!

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வருமான வரி விவரம்:
ஆண்டுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவோருக்கு வரி கிடையாது.
ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும்.
ரூ.5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 20 சதவீத வரி விதிக்கப்படும்.
ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இதில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. வருமான வரி விகிதம் அதேதான்.
ஆனால் ரூ 1.6 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதம் வரி என்பதை, இப்போது ரூ 5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு என்று வரம்பை உயர்த்தியுள்ளார் முகர்ஜி.
இதன்மூலம் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வருட வருமானம் பெறும் மாத ஊதியதாரர்கள் பயன் பெறுவர். வருமான வரி செலுத்துவோரில் 60 சதவீதம் பேர் இந்த ஊதிய விகிதத்தில் இருப்பவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலவரத்தில் ஆண்டு வருமானம் ரூ 1.6 லட்சம் என்பது சர்வசாதாரண விஷயமாகும். நடுத்தர பதவி வகிப்பவர்களும் கூட ரூ.3. லட்சத்துக்கும் அதிகமான ஆண்டு வருவாய் பெறுபவர்களாக உள்ளனர்.
சாதாரண பணிகளில் உள்ளவர்களுக்கும் ரூ.15 ஆயிரத்துக்கும் அதிகமான சம்பளம் தரப்படும் இன்றைய சூழலில் வருமான வரி வரம்பு ரூ 1.6 லட்சம் என்பது அனைத்து பணியாளர்களையும் கடுமையான மனச்சோர்வுக்கு ஆளாக்குகிற விஷயமாகும்.
சம்பளம் பெறும் நபர்கள் அனைவருமே கிட்டத்தட்ட வருமான வரி செலுத்துபவர்களாக மாறச் செய்திருப்பது ஒன்றுதான் பிரணாப் முகர்ஜியின் இந்த ஆண்டு சாதனையாகும்.
இனி வரும் மாதங்களில் எந்தத் தேர்தலும் இல்லை, மக்களிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என்ற தைரியமும் கூட பிரணாப்பின் இந்த பட்ஜெட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
சம்பளக்காரர்களின் வருமானத்தைப் பிடுங்குவதில் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு கவனிக்கும் இந்த அரசு, கருப்புப் பண முதலைகளுக்கு எதிராக துரும்பைக் கூட கிள்ளிப் போட முயற்சிக்கவில்லை. ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைப் பறிமுதல் செய்வோம் என தொடர்ந்து பத்திரிகைகளுக்கு அறிக்கை தருவதோடு தங்கள் கடமை முடிந்ததாக மத்திய அரசு நினைக்கிறது போலும். அது பற்றிய சின்ன அறிவிப்பு கூட இந்த பட்ஜெட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!.












Click it and Unblock the Notifications