சென்னையிலும் பெட்ரோல் ரூ. 3, டீசல் ரூ. 2.80 உயர்ந்தது

சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ.3 ம், டீசல் ரூ. 2.80ம் உயர்ந்து விட்டது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வுக்கு அமலுக்கு வந்தது.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து பாரிக் கமிட்டி அளித்துள்ள அறிக்கை மீது மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால் நேற்று பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை ஒரு ரூபாய் கூட்டி விட்டார் பிரணாப் முகர்ஜி.
இதன் விளைவாக நாடு முழுவதும் நேற்று பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்து விட்டன. கிட்டத்தட்ட நாடு முழுவதுமே நேற்று நள்ளிரவு முதல் புதிய விலை அமலுக்கு வந்து விட்டது.
ஒவ்வொரு நகரிலும் ஒரு மாதிரியான விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தலைநகர் டெல்லியில்,
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 71 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 55 காசுகளும் உயர்த்தப்பட்டன.
அதன்படி, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.47.43 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.35.42 ஆகவும் உயர்ந்துள்ளது.
சென்னையில், பெட்ரோல் விலை ரூ.48.58-ல் இருந்து ரூ.51.59 ஆகவும், (உயர்வு ரூ.3.01) டீசல் விலை ரூ.34.98-ல் இருந்து ரூ.37.78 ஆகவும், (உயர்வு ரூ.2.80) உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்துள்ளது. பாரிக் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. அதற்குள்ளாகவே இந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இனி பாரிக் கமிட்டி அறிக்கையை அரசு ஏற்று அதை அமல்படுத்தினால் இன்னும் 5 ரூபாய் வரை பெட்ரோல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 10 நாட்களில் பாரிக் கமிட்டி அறிக்கையை ஏற்பது குறித்து பரிசீலிக்கவுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார். இதனால் வாகனங்களை பயன்படுத்துவோர் பெரும் திகிலில் உள்ளனர்.
இதை விட முக்கியமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்னும் எந்த அளவுக்கு உயரப் போகிறதோ என்ற பெரும் கவலையில் சாதாராண மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் மூழ்கியுள்ளனர்.
வரி உயர்வை திரும்பப் பெற மாட்டேன்- பிரணாப்
இதற்கிடையே பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப் பெற முடியாது என்று பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி உயர்வால் பண வீக்கம் உயரும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அது 0.05 சதவீத அளவுக்கே இருக்கும். விலைவாசியும் உயரத்தான் செய்யும். அதையும் நான் மறுக்கவில்லை.
ஆனால் நமக்கு இப்போது முக்கியத் தேவை வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டியதுதான். 10 சதவீத வளர்ச்சியைத்தான் நாம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும், திட்டமிட வேண்டும்.
பெட்ரோலியப் பொருட்களுக்கு சுங்க வரி உயர்வு என்பது புதிய விஷயமில்லை. எனவே வரி உயர்வை திரும்பப் பெறும் கேள்விக்கே இடமில்லை. அப்படி இருந்தால், வரி உயர்வை அறிவித்து இருக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார் பிரணாப்.












Click it and Unblock the Notifications