டீசல் விலை உயர்வு எதிரொலி- ஆம்னி பஸ்களில் கட்டணத்தை ஏற்றி விட்டனர்
சென்னை: டீசல் விலை உயர்ந்துள்ளதன் எதிரொலியாக, ஆம்னி பஸ்காரர்கள் கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளனர். கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில் இப்போதே கட்டணத்தை உயர்த்தியிருப்பதால் மக்கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.
மத்திய அரசு தனது பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கான சுங்க வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய் ஏற்றியது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதனால் அனைத்துப் பகுதிகளிலும் இரண்டரை ரூபாய் முதல் 3 ரூபாய் வரை பெட்ரோலுக்கும், 3 ரூபாய் வரை டீசலுக்கும் விலை உயர்ந்துள்ளது.
அடுத்து பாரிக் கமிட்டி பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தும் வாய்ப்புகள் பிரகாசமாகி வருகின்றன. அப்போது பெட்ரோலுக்கு மேலும் ரூ. 5ம், டீசலுக்கு 3 ரூபாயும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
ஏற்கனவே விலைவாசி உயர்வுப் பிரச்சினையால் வெதும்பிப் போய்க் கிடக்கும் மக்களுக்கு இந்த சரமாரி விலை உயர்வு பெரும் அதிர்ச்சியையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து உடனடியாக இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
எதிர்க்கட்சியினருடன் தற்போது திமுக, திரினமூல் காங்கிரஸ் போன்ற காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
இது இப்படி இருக்க தமிழகத்தில் ஆம்னி பஸ்காரர்கள் திடீரென கட்டணத்தை உயர்த்தி விட்டனர். பெரும்பாலான நிறுவனங்களில் இன்று முதல் புதிய கட்டணத்தை அமல்படுத்துகின்றனர்.
குறைந்தது 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாம்.
இந்தக் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். விரைவில் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது. கோடை விடுமுறையின்போது ரயில் கிடைக்காத பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆம்னி பஸ்களைத்தான் நாடுவர். அப்போது வழக்கத்தை விட அதிக கட்டணத்தை கறப்பது ஆம்னி பஸ்களின் வாடிக்கை. ஆனால் இப்போதே கட்டணத்தை உயர்த்தியிருப்பதால் கோடை விடுமுறையின்போது மேலும் அதிக கட்டணத்தை வசூலிப்பார்கள் என்று மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
ஸ்டிரைக்கில் குதிக்கும் ஆட்டோக்கள்...
இதற்கிடையே பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து சிஐடியூ மாநில செயலாளர் செளந்தரராஜன் கூறுகையில், சென்னையில் 60 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. நாங்கள் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கடுமையான போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
5-ந் தேதி அன்று விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம் நடத்த உள்ளன. அன்றைய தினமே சி.ஐ.டி.யு. சார்பில் ஆட்டோ வேலை நிறுத்தம் செய்யலாமா என்று யோசித்து வருகிறோம்.
இருப்பினும் என்று போராட்டத்தை நடத்துவது என்பது குறித்து திங்கள்கிழமை முடிவு செய்யவுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications