விலைவாசியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கிறோம் - பிரதமர்
டெல்லி: பெருகி வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைளை எடுக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்று லோக்சபாவில் பேசினார்.
அவரது பேச்சின் முக்கிய அம்சங்கள்...
விலைவாசி உயர்வைக் குறைக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 8 சதவீதமாக உயரும், அதைத் தாண்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த ஒரு வருடமாகவே விலைவாசி உயர்ந்தவண்ணம்தான் உள்ளது. இது குறித்து அரசு கடும் கவலை அடைந்துள்ளது. இதைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க அனைத்து நடைமுறை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
பருவ மழை பொய்த்தது மற்றும் உலகப் பொருளாதார சிக்கல் என இரு முனை சவால்களால்தான் நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. இதை சமாளிக்க அரசு கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியையும் அரசு எட்ட வேண்டியுள்ளது.
இந்தியா இந்த நிதியாண்டில் 7.2 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரையிலான பொருளாதார வளர்ச்சியை எட்டி விடும். அடுத்த நிதியாண்டில் இது 8 சதவீதத்தைத் தாண்டி விடும்.
நமது நாட்டின் பொருளாதார அடிப்படைகள் மிகவும் வலுவாக இருக்கின்றன. நமது பொருளாதாரத்தை நாம் சிறப்பாக கையாண்டால், நிச்சயம், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை நம்மால் எட்டி விட முடியும்.
பொருளாதார சிக்கலையும், பருவ மழை பொய்த்ததால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையையும் இந்தியா சமாளித்த விதம் மிகவும் பாராட்டுக்குரியது என்றார் சிங்.












Click it and Unblock the Notifications