டெல்லி, மும்பை, பெங்களூர் நகரங்களுக்கு தீவிரவாதிகள் குறி!
டெல்லி: டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்துள்ள தகவலை அடுத்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் சமீபத்தில் சல்மான் என்ற என்பவன் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரிடம் பிடிபட்டான்.
உத்தரபிரதேச மாநிலம் அஜம்கர் பகுதியில் உள்ள சஞ்சர்பூரை சேர்ந்த இவன் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் தற்கொலை படை பிரிவில் இயங்கி வந்தவன். பாகிஸ்தானுக்கு சென்று ஆயுதப் பயிற்சி பெற்று வந்தவன்.
அவன் ஜெய்ப்பூர், ஆகமதாபாத் நகரங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் இவனை பிடித்தனர். தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இவனை லக்னோவில் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
அப்போது சல்மான் பல பரபரப்பு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தான். மும்பை தாக்குதல் போல இந்தியாவில் மீண்டும் தாக்குதல்களை நடத்த தீவிரவாதிகளும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினான்.
இந்த தாக்குதல்களை விரைவாக நடத்தும்படி பாகிஸ்தான் ஐஎஸ்ஐ நெருக்குதல் கொடுத்துள்ளதாகவும் அவன் கூறினான். இந்த தாக்குதலுக்கு கராச்சி புராஜெக்ட் என்று பெயரிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளின் மூலம் தாக்குதல்களை அரங்கேற்ற முடிவு செய்துள்ளனர். இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய முஜாகிதீன்கள் ஏற்கனவே பாகிஸ்தான் சென்று பயிற்சி பெற்று திரும்பியவர்கள்.
டெல்லி, மும்பை, பெங்களூர் நகரங்களில் தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி இந்திய முஜாகிதீன்களுக்கு ஐஎஸ்ஐ உத்தரவிட்டிருப்பதாக சல்மான் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.
இந்த சதி திட்டத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் எத்தகைய உதவிகள் செய்துள்ளனர் என்ற தகவலையும் சல்மான் கூறியுள்ளான்.
டெல்லி, மும்பை, பெங்களூரில் தொடர்குண்டு வெடிப்புகளை நடத்த வேண்டும். இந்த தாக்குதல்களில் வெளிநாட்டுக்காரர்கள் அதிக அளவில் கொல்லப்பட வேண்டும் என்பதே பாகிஸ்தான் ஐஎஸ்ஐயின் உடனடி திட்டம் என்று சல்மான் கூறினான்.
கராச்சியில் தனக்கு எத்தகைய பயிற்சிகள் கொடுக்கப்பட்டது என்பதை விவரித்த அவன், அங்கு மேலும் பல இந்திய இளைஞர்களை சந்தித்ததாக கூறினான்.
அந்த இளைஞர்கள் அனைவரும் துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உஷார் அறிக்கை அனுப்பி உள்ளனர்.
டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications