Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா - முலாயம், லாலு கட்சிகளுக்கு கருணாநிதி அறிவுரை

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'முதலில் விருந்துக்கான அழைப்பை ஏற்று வீட்டுக்குள் செல்வோம். அதன் பின்னர் நாம் விரும்பிய பண்டங்களை பரிமாறச் செய்வோம்' என்று மசோதாவை எதிர்க்கும் கட்சிகளுக்கு கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா சர்வதேச மகளிர் தினமான நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திமுக, அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

ஆனால் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட சில கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் இப்போது உள்ள நிலையிலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டு உள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வரப்போகிறது - வரப்போகிறது என்று கடந்த பதிமூன்று ஆண்டு காலமாகச் சொல்லப்பட்டு வருகின்ற மகளிர் இடஒதுக்கீடு மசோதா இந்த முறை எப்படியும் நிறைவேற்றப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்போடு 8ம் தேதி ராஜ்யசபாவில் முன்மொழியப்படவுள்ளது.

ஆளுங்கட்சியோடு சேர்ந்து முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் தனது உறுப்பினர்களுக்கு தீர்மானத்தை ஆதரிக்க கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

இளம் தலைவர் ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோதுதான் மகளிருக்கு நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் பிரச்னை பெரிதாகப் பேசப்பட்டது.

அதற்கு முதற்கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்த பஞ்சாயத்து ராஜ் சட்டம் நடைமுறைக்கு வந்த போது, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது கட்டாயமாக்கப்பட்டது.

1996ம் ஆண்டு 4வது முறையாக கழக ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், அதற்கு முன்பு பல ஆண்டு காலம் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை நடத்தி மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் அனைத்திலும் 1,16,747 மக்கள் பிரதிநிதிகள் நிர்வாகப் பொறுப்புகளையேற்கும் நிலை உருவானது.

அப்போது, மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்துப் பதவிகளிலும் 33 விழுக்காடு ஒதுக்கீடு செய்து பெரும் சாதனை புரிந்ததின் வாயிலாக 44,143 மகளிர் அப்போது உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பேற்கும் நிலைமையை தமிழகத்தில் கழக அரசு செய்து காட்டியது.

அதே 1996ம் ஆண்டு தான் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா முதலில் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.

அன்றைய பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியில் 81வது அரசியல் சாசன திருத்தத்தின் கீழ் இந்த மசோதாவை அன்றைய மத்திய சட்ட அமைச்சராக இருந்த ராம்காந்த் காலப் முன் மொழிந்தார்.

சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக அந்த மசோதா - நாடாளுமன்ற உறுப்பினர் கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

அந்தக் குழுவின் அறிக்கையானது அதே ஆண்டு டிசம்பர் 9ம் தேதியன்று பதினோறாவது மக்கள் அவையில் முன்மொழியப்பட்டது.

பின்னர் அதற்கடுத்த பன்னிரண்டாவது மக்கள் அவையிலே, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலே 84வது அரசியல் சாசன திருத்தமாக இந்த மசோதா நாடாளுமன்றத்தில் 1998ல் மீண்டும் முன்மொழியப்பட்ட போதிலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மக்களவை ஒத்தி வைக்க நேரிட்டது.

அதன்பிறகு பதிமூன்றாவது மக்கள் அவையில், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 22.11.1999 அன்று மீண்டும் மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.

அப்போது சட்ட அமைச்சராக இருந்த ராம் ஜெத்மலானி மசோதாவை முன்மொழிந்தபோது - சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி. கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து - சட்ட அமைச்சரின் கையிலே இருந்த மசோதாவின் நகலைப் பிடிங்கி, கிழித்தெறிந்தனர். அதன் காரணமாக அப்போதும் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.

அதன்பின்னர் 2002ம் ஆண்டில் ஒரு முறையும், 2003ம் ஆண்டில் இரண்டு முறைகளும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தபோதிலும், அப்போதும் அதனை நிறைவேற்றிட இயலவில்லை.

2008ம் ஆண்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலே - சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை முன்மொழிந்த போதிலும், அப்போதும் அவையிலே ஏற்பட்ட அமளியால் மசோதா நிறைவேறவில்லை.

திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரையில் - இன்று நேற்றல்ல, பல ஆண்டுக் காலமாக இந்த மகளிர் இடஒதுக்கீடு பிரச்சினையில் ஆழ்ந்த அக்கறை கொண்டு, ஒவ்வொரு மாநாட்டிலும், பொதுக் குழுவிலும் தீர்மானங்களை நிறைவேற்றிடத் தவறியதில்லை.

பெண்ணுரிமைக்காக 1928ம் ஆண்டிலேயே 'குடியரசு' இதழிலே தந்தை பெரியார், 'பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அனேக இடங்களில் அனேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே.

இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலை உள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு, மிகப் பாசாங்கு செய்து வருகிறார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் - எவ்வழியிலும் - பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது.

தற்காலம் பெண்கள் விடுதலைக்காகப் பெண் மக்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல், மேலும், மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளைப் பலப்படுத்திக் கொண்டே போகும் என்பது நமது அபிப்பிராயம்' என்று எழுதினார்.

இன்றைக்கு இந்திய திருநாட்டின் மூலை முடுக்கெல்லாம் முழங்கப்படுகின்ற கொள்கை முரசமாக - மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்ற ஒலியைக் கேட்க முடிகிறது.

ஏன்; தனியாக மகளிருக்கு இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரவேண்டும்? இப்போது மகளிர் அந்தப் பொறுப்புகளுக்கு போட்டியிட முடியாதா? சட்டம் ஏதாவது தடுக்கிறதா?

சட்டம் தடுக்கவில்லை! சட்டமன்ற வேட்பாளராகவோ, நாடாளுமன்ற வேட்பாளராகவோ; தேர்தலில் ஒரு ஆண் போட்டியிடுவதைப் போல; இப்போது ஒரு பெண்ணும் போட்டியிடலாம்; அரசியல் சட்டம் அதைத் தடுக்கவில்லை.

ஆனால் ஆணாதிக்கம் அவர்களைப் போட்டியிட அனுமதிக்கவில்லை. ஆணாதிக்கத்தின் இந்தச் சனாதனச் சம்பிரதாயத்துடன் எவ்வளவு காலத்துக்குச் சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியும்;

அதனால்தான் மகளிருக்கு இத்தனை இடம் என்று ஒதுக்கீடு செய்து, அந்தச் சட்டப்படி அந்த இடங்களில் மகளிர் மட்டும்தான் போட்டியிட முடியும் என்று செய்துவிட்டால்; அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைக்கான அடிக்கல் நாட்டும் திருப்பணி நிறைவேறத் தொடங்கிவிடும்.

ஏற்கனவே தலித் எனப்படும் தாழ்த்தப்பட்ட பெருங்குடி மக்களை; இந்த உரிமைகளை; பெறக் கூடியவர்களாகக் கைதூக்கிவிட இருக்கின்ற தனித் தொகுதி முறை எல்லா மட்டத்திலும் அரசியல் சட்ட ரீதியாக அமைக்கப்பட்டிருப்பதை மாதிரியாகக் கொண்டு;

அந்தப் பழைய நிலைக்குப் பங்கமேதும் நேராமல்; இப்போது கோரிக்கையாக வைக்கப்படுகிற மகளிர் இடஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டு அதற்கான துவக்கத்தை நடத்த சமூகப் பிரக்ஞையுள்ள, உரிமைகள் வழங்கப்படுவதில் உள்ள நியாயங்களை நிலை நாட்டுவதற்கு நினைத்திடும் இயக்கங்கள் முன் வரவேண்டும்.

பொதுக் கருத்து உருவாக வேண்டும் என்று பொறுமையுடன் காத்திருப்பது பொறுப்புடையோர் செயல் எனினும்; கோரிக்கையைத் தள்ளிப் போடுவதற்காகக் காதிதிருப்பு என்பது ஏற்க இயலாத ஒன்றாகிவிடும்.

சட்டம் நிறைவேற்றிட தேவையான வாக்குகள் கிடைக்காவிட்டால் கூட இந்த மசோதாவுக்கு ஆதரவு தராதவர்களை மகளிர் சமுதாயத்துக்கு அடையாளம் காட்டலாம் அல்லவா?

பொதுக் கருத்து பற்றி பிரஞ்சு நாட்டுப் பேரறிஞன் - பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து; பிரெஞ்சுப் புரட்சிக்கான எழுச்சிப் பாதையை தனது எழுத்து மூலம் வகுத்துக் கொடுத்தவர்களில் ஒருவரும், வால்டேர் காலத்தவருமான ரூசோ என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

"புதிதாக ஒன்றைச் செயல்படுத்த எடுத்துக் கொள்ளும்போது அதற்கான பொதுக் கருத்து அறிவதற்குத் தேவையான ஒப்பந்தம் ஏற்படத்தான் எல்லோருடைய கருத்தும் ஒரே வகையாக இருக்க வேண்டும்.

ஆனால் அதற்குப் பிறகு எல்லா நிலைகளிலும் அந்தப் பொதுக் கருத்து, எல்லோருடைய விருப்பம் போல அமைந்திட முடியாது. அவ்வாறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, பெரும்பான்மையோர் கருத்து எதுவோ, அதைத்தான் பொதுக் கருத்து எனக் கொள்ள வேண்டும்''

ரூசோவின் இந்த கருத்தையும்; மகளிர்க்கான இடஒதுக்கீடு சட்டம் கொணர ஆர்வமுடையோர் சிந்தித்துச் செயல்பட முன்வர வேண்டும்.

எனவே, முதலில் மகளிருக்கு 33 சதவீதம் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதும்; பின்னர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் என்று படிப்படியாக உள் ஒதுக்கீடு செய்து கொள்வதும் சரியானதாகும்.

முதலில் விருந்துக்கான அழைப்பை ஏற்று வீட்டுக்குள் செல்வோம். பின்னர் விருந்தில் படைக்கப்படும் பண்டங்களில் நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடியது எது; ஒவ்வாதது எது என்பதைச் சொல்லி அதற்கேற்பப் பரிமாறச் செய்வோம்' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+