5வது முறை முதல்வரான பின்னர் முதல் முறையாக இடைத் தேர்தல் பிரசாரத்திற்குச் செல்லும் கருணாநிதி
சென்னை: முதல்வரான பின்னர் முதல் முறையாக முதல்வர் கருணாநிதி, பென்னாகரம் இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு வருகிறார்.
கடந்த 2006ம் ஆண்டு ஐந்தாவது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார் கருணாநிதி. அதன் பின்னர் தமிழகத்தி்ல் 10 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது.
மதுரை மேற்கு, மதுரை மத்தி, திருமங்கலம், கம்பம், இளையாங்குடி, தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம், வந்தவாசி, திருச்செந்தூர் ஆகியவையே அவை.
இந்த இடைத் தேர்தல்களுக்கான பிரசாரத்தில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. மாறாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியே பிரசாரத் திட்டங்களையும், பிரசாரத்தையும் பார்த்துக் கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது பென்னாகரம் தொகுதிக்கான இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு செல்கிறார் முதல்வர் கருணாநிதி. அதாவது ஐந்தாவது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்த பின்னர் முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் முதல் இடைத் தேர்தல் பிரசாரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பாமகவினர் கொடுத்து வரும் கடும் போட்டி காரணமாக திமுகவினரே அங்கு சற்று திணறும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக பாணியில் பாமகவினர் கொடுத்து வரும் நெருக்கடி மற்றும் தீவிரக் கண்காணிப்பு காரணமாக அங்கு இரு கட்சி வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில்தான் முதல்வர் கருணாநிதி பென்னாகரம் இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications