ஸ்ரீபெரும்புதூர் கோர்ட் சம்மன் - ஏப். 2ம் தேதி ஆஜராகிறார் நித்தியானந்தா

ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சன்னியாசிகளுக்கு பெரும் அவப் பெயரை ஏற்படுத்தி விட்டார் நித்தியானந்தா. எனவே அவரைத் தண்டிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அந்த மனுவை விசாரித்த கோர்ட், நித்தியானந்தா நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இதை ஏற்று ஏப்ரல் 2ம் தேதி நித்தியானந்தா ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜராகவுள்ளார்.
இதற்கிடையே நித்தியானந்தா ஹரித்வாரில் தங்கியிருப்பது உறுதியாகியுள்ளது. அங்குள்ள ஹோட்டல் ஒன்றில்தான் அவர் தங்கியிருந்தார். ஆனால் அது தற்போது தெரிந்து விட்டதால் அந்த ஜாகையை மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.
சேலம் கோர்ட்டில் பண மோசடி வழக்கு
இதற்கிடையே, சேலம் கோர்ட்டில் நித்யானந்தா மீது வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சேலம் அஸ்தம்பட்டி எம்.டி.எஸ்.நகரை சேர்ந்தவர் வக்கீல் லட்சுமணபெருமாள். இவர் சார்பில் வக்கீல்கள் பார்த்தசாரதி, எஸ்.ஆர்.அண்ணாமலை ஆகியோர் நித்யானந்தா மீது சேலம் நீதித்துறை நடுவர் 5வது கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
லட்சுமணபெருமாள் வக்கீல் தொழில் செய்து வருகிறார். அவர் நித்யானந்தாவின் தீவிர பக்தர். அவர் மீது ஏற்பட்ட பக்தி காரணமாக பெங்களூரில் உள்ள ஆசிரமத்துக்கு பலமுறை சென்று வந்துள்ளார்.
கடந்த 18.2.2010 அன்று சேலம் சீரகாபாடியில் உள்ள நித்யானந்த பீட கிளை திறப்பு விழாவுக்கு நித்யானந்தா வந்தார். அவரிடம் வக்கீல் லட்சுமணபெருமாள், தனது மனைவி வசந்திக்கு தலையில் ஒருபக்கமாக வலி இருப்பதாக கூறினார்.
அப்போது நித்யானந்தா, தனது பீடத்துக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடை கொடு. உன் மனைவிக்கு உள்ள நோயை என் தியானத்தால் தீர்த்து வைக்கிறேன் என்று கூறினார். அதை தொடர்ந்து ரூ.25 ஆயிரம் பணத்தை புகார்தாரர் கொடுத்தார். ஆனால் அவரது மனைவிக்கு நோய் தீர்ந்தபாடில்லை.
நித்யானந்தா பொறுப்பற்ற நிலையில் ஆசிரமம் நடத்தி புகார்தாரரின் மத உணர்வை புண்படுத்தி இருக்கிறார். தன்னிடம் தெய்வீக சக்தி உள்ளது என்று வக்கீல் லட்சுமண பெருமாளிடம் ரூ.25 ஆயிரம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதற்கு கோர்ட்டில் அழைத்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கை பரிசீலித்த நீதிபதி அதை விசாரணைக்கு ஏற்று வருகிற 22-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications