பெண்களைக் கடைச்சரக்கு போல கையாளுகிறது மீடியா- கனிமொழி
சென்னை: பெண்களை பத்திரிக்கை உலகம் கடைச்சரக்கு போல கையாளுகிறது என்று திமுக ராஜ்யசபா உறுப்பினரும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
மணியம்மை நினைவு நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொண்டு கனிமொழி நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
இந்த சமூகத்திலே எந்த திசையில் சென்று கொண்டு இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியாத ஒரு திக்கிலே திசையிலே சென்று கொண்டு இருக்கிறார்கள் பெண்கள்.
நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். எத்தனை ஆசிரமங்கள், எத்தனை சாமியார்கள். அவர்கள் நம்பிக்கையை எல்லாம் உடைக்கக் கூடியவர்கள்.
நான் எந்த சாமியாரையும், யாருடைய தனிப்பட்ட விவகாரத்திலும் எந்த கேள்வியும் எழுப்பக்கூடியவராக இல்லை. அதுபற்றிய அக்கறை நமக்கு இல்லை. ஆனால் அந்த ஆசிரமத்தை முன்எ டுத்து நடத்தக்கூடிய அவர்கள், அவர்களை நம்பி வரக் கூடியவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கிறார்களா? என்ற அந்த கேள்வியை நம்மைப் பார்த்து கேட்டுக்கொள்ள வேண்டும்.
இந்த பிரச்சினையால் அதிகமாக பாதிக்கக்கூடியவர்களாக பெண்களாகத்தான் உள்ளனர். இதற்கு பல காரணங்கள் உள்ளது. இந்த சமூகத்தில் பெண்கள் தங்களது குறைகளை, தனது கனவுகளைக்கூட வெளிப்படுத்த முடியாத அடிமையாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு பெண் கைதேர்ந்த இசை கலைஞராக இருக்கலாம், ஆனால் உங்கள் கணவர், உங்கள் தாய், தந்தையர் பாடக் கூடாது, மேடையில் ஆடக்கூடாது என்று தடை விதிக்கும் போதும் கணவர் எனது பெற்றோரை பார்த்துக்கொள்ள வேண்டும் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் போதும் அவள் கண்ட கனவுகள் அந்த ஒரு நிமிடத்தில் உடைந்து தூள் தூளாகி விடுகிறது.
இப்படி பெண்களின் எத்தனையோ கனவுகள் உடைக்கப்படுகிறது. மன அழுத்தம் காரணமாக ஒரு பெண் ஒரு வைத்தியரை பார்க்கப் போகிறேன் என்றால் குடும்பமே பொங்கி எழும். நீ எப்படி அங்கே போக முடியும் நான் உன்னை நன்றாக வைத்திருக்கவில்லையா 3 வேளை சாப்பாடு, கட்ட துணி தரவில்லையா, இதை விட நன்றாக வைத்திருப்பவர்கள் யாராக இருக்க முடியும், என்ன உனக்கு மன அழுத்தம் என்று கூறி டாக்டரை பார்க்க போகக்கூடாது என்று மறுப்பார்கள்.
ஆனால் அதே நேரத்தில் அதே பெண் எனக்கு மனது சரி இல்லை, நான் கோயிலுக்கு போகிறேன், நான் ஒரு சாமியாருக்கு கால் பிடிக்கப் போகிறேன் என்றால், போய் வா என்ற மிகுந்த மன மகிழ்ச்சியோடு அவரை ஒன்றாக நின்று வழி அனுப்புகிறது. அப்படி என்றால் அந்த பெண்ணின் போக்கிடம் என்னதாக இருக்க முடியும்.
மீடியாக்களும் பெண்களை இன்று கடைச்சரக்காக்கி விட்டன. ஒருபுறம் பெண்களை கலாச்சாரத்தின் காவலர்கள் என்று கூறிக் கொண்டு மறுபக்கம் அவர்களை ஏமாற்றி மோசடி செய்கின்றனர் என்றார் கனிமொழி.












Click it and Unblock the Notifications