புதிய சட்டசபையில் முதல்வர் கருணாநிதியின் படம் இடம்பெற்றது!
சென்னை: தமிழக சட்டசபையில் முதல் முறையாக முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படம் மாட்டப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு கடந்த 13ம் தேதி திறக்கப்பட்டது.
புதிய கட்டிடத்தில் 2010-11ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கலாவதை ஒட்டி, மேஜைகளில் அமைச்சர்களின் பெயர்கள், எதிர்க்கட்சி தலைவர்களின் பெயர்களை பொறிக்கும் பணிகள் நேற்று நடைபெற்றன.
முதலமைச்சர் கருணாநிதி, நிதியமைச்சர் அன்பழகன் ஆகியோர் அமருவதற்கு, ஒன்றிணைக்கப்பட்ட இரட்டை இருக்கை பொருத்தப்பட்டுள்ளன. இதுபோல், மற்ற அமைச்சர்களுக்கும் இரட்டை இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இத்தனை நாட்கள் கட்டுமான பணிகள் நடந்ததால், அங்கு படிந்திருக்கும் தூசுகளை அகற்றும் பணியும், தரைகளை சுத்தப்படுத்தும் பணியும் நேற்று தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
சட்டசபையில், முதல் முறையாக முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் மாட்டப்பட்டுள்ளது. பழைய சட்டசபையில் இருந்த 10 தலைவர்களின் படங்களும் இந்த புதிய சட்டசபையில் மாட்டப்பட்டுள்ளன.
இதுபோல், முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் படமும், புதிய சட்டசபையில் புதிதாக இடம்பெறுகிறது. இதற்காக, அவரது வீட்டில் இருந்து பிரத்யேகமாக புகைப்படம் பெறப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை பார்வையிட வரும் முக்கிய பிரமுகர்களுக்காக (விஐபி) முதல்முறையாக, சட்டமன்றத்துக்குள்ளாகவே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் இருக்கைக்கு வலப்புறத்தில் ஒரு சிறிய தடுப்பு ஏற்படுத்தப்பட்டு அங்கு, அவர்களுக்காக இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
பழைய சட்டசபையில் முக்கிய பிரமுகர்கள், சட்டசபை நிகழ்ச்சிகளை மேலிருந்து பார்க்கும் வகையில் இருபுறங்களிலும் மாடம் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் புதிய சட்டசபையிலோ, சபாநாயகர் இருக்கைக்கு பின்புறமாக வலதுபுறத்தில் முக்கிய பிரமுகர்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் இருக்கைக்கு இடபுறத்தில், அதிகாரிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற வளாகத்தில், முதல் கட்டிடமாக முதல்மைச்சர் வளாகத்தின் வாயில் சுவரில் தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், வள்ளுவர் கோட்டம் மற்றும் தஞ்சை பெரிய கோவில் ஆகியவற்றின் டெரகோட்டா ஓவியங்களை பதிக்க கருணாநிதி விரும்பினார்.
அதன் பேரில் ஒரு தனியார் நிறுவனம், அப்பணியில் ஈடுபட்டது. ஆனால், அதில் பல குறைகள் இருந்ததை கருணாநிதி கண்டுபிடித்துக் கூறினார். அந்த நிறுவனத்தினரால் கருணாநிதி விரும்பியபடி செய்யமுடியவில்லை. அதனால், அது தற்போதைக்கு மூடிவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications