நக்ஸல் குண்டு-ராஜதானி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது
கயா: பீகாரில் மாவோயிஸ்டுகள் வைத்த குண்டு வெடித்து தண்டவாளம் தகர்ந்ததில் புவனேஸ்வர்-டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகளும், என்ஜினும் தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
பீகார் மாநிலம் கயா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு இந்த விபத்து ஏற்பட்டது.
துணை ராணுவத்தைக் கொண்டு மாவோயிஸ்டுகள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருவதை எதிர்த்து 7 மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நேற்று முதல் 48 மணி நேர பந்த் அறிவித்துள்ளனர்.
இந் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தால் அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தனி ரயில் அனுப்பப்பட்டு ராஜதானி எக்ஸ்பிரசில் இருந்த பயணிகள் முகல்சராய் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் டெல்லிக்கு அனுப்பப்படவுள்ளனர்.
கயா ரயில் நிலையத்தில் இருந்து ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியவுடன் இந்த குண்டு வெடித்தது. அதில் தண்டவாளம் முழுமையாக தகர்ந்து போனது.
அதேபோல மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் ரயில் தண்டவாளங்கள் குண் வைத்து தகர்க்கப்பட்டுள்ளன.
இதில் ஒரிஸ்ஸாவில் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால் பிகார் உள்பட இந்த 4 மாநிலங்களிலும் ரயில் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டில் போலீஸ்காரர் சுட்டுக்கொலை
இந் நிலையில் ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட்களால் போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சவுகா போலீஸ் நிலையம் அருகில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவரை அங்கு வந்த நக்ஸல்கள் சுட்டுக் கொன்றனர்.
மேலும் நக்சல்கள் எதிர்ப்பாளர்கள் சிலரது வீடுகளையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
வியாபாரிகள் கடத்தல்:
மேலும் ஜார்கண்டில் மாவோயிஸ்டுகளால் 4 வியாபாரிகள் கடத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications