அனோமாவிடம் பொன்சேகாவிடம் இலங்கை போலீஸ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

Anoma and Fonseka
கொழும்பு: பொன்சேகாவின் மனைவி அனோமாவிடம், இலங்கை சிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் தனக்கு ஏசி வசதி வேண்டும் எனக் கேட்டுள்ளாராம் பொன்சேகா.

அதிபர் தேர்தல் முடிந்த கையோடு பொன்சேகாவைப் பிடித்து ராணுவத்தின் கையி்ல ஒப்படைத்து விட்டார் ராஜபக்சே. காற்று கூட புக முடியாத அறைக்குள் அவரைப் போட்டு வைத்திருப்பதாக பொன்சேகா தரப்பி்ல் குற்றம் சாட்டப்படுகிறது.

பொன்சேகாவை விசாரிக்க ராணுவ கோர்ட்டும் அமைக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் பொன்சேகாவின் மனைவி அனோமாவிடம் சிஐடி போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மாலையில் ஆரம்பித்த விசாரணை நள்ளிரவு வரை நீடித்ததாக கூறப்படுகிறது. உங்களை விசாரிக்க வேண்டும் என சனிக்கிழமை போன் மூலம் அனோமாவிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது வேறு வேலை இருப்பதாக அனோமா கூறவே, ஞாயிற்றுக்கிழமை மாலை வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, காவலில் உள்ள தனக்கு ஏசி வசதி வேண்டும் என பொன்சேகா கூறியுள்ளாராம். இதுகுறித்து அனோமா விளக்கம் அளிக்கையில், எனது கணவர் உடலில் உள்ள குண்டுக் காயங்கள் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஏ.சி. அறை வழங்கப்பட வேண்டும் என்று விளக்கியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அனோமா பேசுகையில், ராணுவக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா தமக்கு குளிரூட்டப்பட்ட அறை வேண்டும் என கோரியிருப்பதாகவும், சரத் பொன்சேகா குண்டு காயங்களுக்கு இலக்காகி, தற்போது நுரையீரல் பாதிப்புக்குள்ளாகியதாகவும், தற்போதும் குண்டுத் துகள்கள் சரத் பொன்சேகாவின் நுரையீரலில் இருப்பதாகவும், எனவே சரத் பொன்சேகாவுக்கு குளிரூட்டப்பட்ட அறை தேவைப்படுகிறது.

இலங்கையில் உள்ள கைதிகளிலேயே குளிரூட்டப்பட்ட அறையை கோரிய ஒரே கைதி எனது கணவர் தான். பொன்சேகா மட்டுமே தமது நுரையீரலில் குண்டுத் துகல்களை சுமக்கின்ற ஒரே கைதி எனவும், இதனால் மற்ற கைதிகளுக்கு சமமாக இவரை பார்க்க முடியாது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை. பொன்சேகாவை அவர்களின் உறவினர்களும் பார்க்க முடியும் என நீதிமன்றம் அனுமதித்துள்ள போதும், உயர்மட்ட அதிகாரிகளின் உத்தரவுக்கு அமைய தன்னை மாத்திரமே அவர்கள் சந்திக்க அனுமதிப்பதாக அவர் கூறினார்.

பொன்சேகா முட்டாளா-அனோமா கண்டனம்:

இதற்கிடையே, தனது கணவர் பொன்சேகாவை முட்டாள் என்று கூறி பத்திரிக்கைக்கு பேட்டி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சேவுக்கு அனோமா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், சிங்கப்பூரில் வெளியாகும் ஸ்ரெய்ட் டைம்ஸ் பத்திரிகைக்கு நீங்கள் அளித்த பேட்டி விபரம் இலங்கை ஊடகங்களில் வெளியானதை என்னால் பார்க்க முடிந்தது. அந்தப் பேட்டியில் எனது அன்புக் கணவரான ஜெனரல் சரத் பொன்சேகா அரசியல் அனுபவமில்லாத முட்டாள் எனத் தெரிவித்திருப்பதைக் கண்டு நானும் எனது குடும்பமும் கவலையும் வேதனையும் அடைந்தோம்.

இவ்வாறு கூறியிருப்பது பத்து மாதங்களுக்கு முன்னர் அவர் உலகின் மிகச்சிறந்த இராணுவத் தளபதி என்று புகழாரம் சூட்டியது நீங்கள் தானா என்று நான் வியப்படைகின்றேன்.

பயங்கரவாதத்திடமிருந்து எமது மண்ணை மீட்டெடுத்ததன் பின்னர் நீங்களும் உங்கள் அரசும் நிமிடத்துக்கொரு தடவை என்ன கூறினீர்கள். எமது படைகளுக்குத் தலைமைத்துவத்தைக் கொடுத்த ராணுவத் தளபதியின் புத்திசாதுர்யமான போர்த்திட்டம் குறித்து முழு நாடுமே பெருமை கொள்வதாக அல்லவா சொன்னீர்கள்.

அன்று போர் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் வெற்றிக் கேக்கை வெட்டுவதற்கு உரிமையானவர் ஜெனரல் சரத் பொன்சேகாவே என்று பகிரங்கமாகக் கூறி அவரைக் கொண்டே கேக்கை வெட்டியதையும் மறந்து விட்டீர்களா? இன்று யுத்த வெற்றியின் சூடு தணிவதற்குள் அவை அனைத்தும் மறக்கப்பட்டவையாகிப் போயுள்ளன.

எனது கணவர் நீங்கள் சொல்வது போன்று அரசியல் தெரியாதவர் என்றால் அவ்வாறான ஒருவருக்குப் பயந்து சட்டவிரோதமாக கைது செய்து தடுத்துவைத்துப் பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தியிருப்பது எதற்காக எனக் கேட்க விரும்புகின்றேன். இதனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒரு ராணுவ வீரரை சர்வதேச ஊடகத்தின் வழியாக முட்டாள் என அவமானப்படுத்துவது நாட்டின் ஜனாதிபதிக்கு உகந்த செயலா என்று எண்ணிப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனது கணவருடன் அவரது ஆதரவாளர்களையும் கைது செய்தது தங்களுக்கும் அரசுக்கும் எதிராக அரச விரோதச்சதி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இன்று அந்த ஆதரவாளர்கள் சகலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சதிக்குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனது கணவர் இருட்டறைக்குள் அடைக்கப்பட்ட நிலையில் மனவேதனையுடன் இருக்கிறார். இந்தத் துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தியவர் நீங்களேதான். இந்தப் பாவத்துக்கு உங்களால் ஒருபோதும் பரிகாரம் தேடமுடியாது என்று கூறியுள்ளார் அனோமா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+