தேர்வு அறையில் மாணவியின் சட்டையை கழற்றி சோதனை!
காஸியாபாத்: தேர்வுக்கு 'பிட்' எடுத்து வந்ததாகக் கூறி தேர்வறையில் மாணவியின் சட்டையை கழற்றிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்யாபாத் அருகே மோடி நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் கடந்த வியாழன் கிழமை அன்று பொதுத் தேர்வுகள் நடந்தன.
மோடி நகரில் உள்ள பிபிஎஸ் இன்டர் காலேஜைச் சேர்ந்த மாணவிக்கு வேறு ஒரு இன்டர் காலேஜ் வளாகத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.
சம்பவத்தன்று காலை ஆங்கிலத் தேர்வுக்காக மாணவி சென்றிருந்தார். தேர்வறையில் வழக்கம்போல தேர்வு எழுதிக் கொண்டிருந்தார்.
அப்போது தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்களா என கண்காணிப்பதற்காக 'பறக்கும் படை' வந்தது. பறக்கும் படையில் இருந்த ஆசிரியை ஒருவர் மாணவியை சந்தேகக் கண்ணோடு பார்த்துள்ளார்.
'பிட்' ஏதும் வைத்துள்ளாரா என சோதித்துப் பார்க்க மாணவியை நாற்காலி மீது ஏறி நிற்கச் சொன்னார். உடன் இருந்த மற்றொரு ஆசிரியை சோதித்துப் பார்த்து எதுவும் இல்லை எனக் கூறிவிட்டார்.
ஆனால் இதில் திருப்தி அடையாத பறக்கும் படை ஆசிரியை, மாணவியின் சட்டையை கழற்றி முழு சோதனை நடத்துங்கள் எனக் கூறியுள்ளார்.
ஆனால் மாணவி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் பிடிவாதமாக இருந்து பறக்கும் படை ஆசிரியை, தனது கீழ் அதிகாரிகளின் மூலம் மாணவியின் மேல் சட்டையை வலுக்கட்டாயமாக கழற்றி சோதனை நடத்தினார்.
இதனால் மிகவும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி அன்றைய தேர்வை எழுத முடியாமல், அரைகுறையாக விடைகளை எழுதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.
'மாணவி முறைகேட்டில் ஈடுபட்டிருந்தாலும் பரவாயில்லை. எந்த தவறும் செய்யாத அப்பாவி மாணவியை தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்.
தவறான சந்தேகத்துக்காக ஒரு மாணவியின் எதிர்காலத்தோடு விளையாடி இருக்கிறார்கள் ஆசிரியர்கள். இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்' என ஆசிரியர்களுடன் மாணவியின் பெற்றோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி பள்ளி தரப்பில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், 'சிறிய தவறு நடந்துவிட்டது உண்மை தான். ஆனால் இதை மீடியாக்கள் பெரிது படுத்தத் தேவையில்லை.
தேர்வறையில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது ஆசிரியர்களின் கடமை.
குற்றம்சாட்டப்படும் மாணவி சட்டையில் துண்டு பேப்பரை மறைத்து வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் தான் சோதனை நடத்தப்பட்டது. அதுவும் சட்டையை முழுதாக கழற்றவில்லை.பாதி அளவு கழற்றித்தான் சோதனை நடத்தப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளனர்.
ஆனால், 'மன்னிப்பு கேட்பதெல்லாம் போதாது. சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுத்தாக வேண்டும்' என பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் போராடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications