அதிமுக-பாமக ரகசிய கூட்டணி: வன்முறையை தூண்டலாம்: கருணாநிதி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தலின்போது பாமகவினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விடலாம். அப்படி நடந்தாலும் திமுக கூட்டணியினர் ஜனநாயகத்தைக் காத்து அமைதி காத்திட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

இப்போது நடைபெறுகின்ற பென்னாகரம் இடைத்தேர்தலில் டாக்டர் ராமதாசுக்கு வேறு எந்த கட்சிக்கும் ஏற்படாத காழ்ப்பும் வெறுப்பும்- சொல்லப் போனால் அ.தி.மு.க.வுக்கு கூட ஏற்படாத அளவுக்கு ஏற்பட்டு- திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றியும் குறிப்பாக என்னை பற்றியும் ஒருமையிலே பேசி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பென்னாகரத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான் விடுத்த வேண்டுகோள் உரையும், அதைத் தொடர்ந்து டாக்டர் ராமாதாஸ் ஆற்றியுள்ள வன்முறைக்கான தூண்டுகோல் உரையும் எல்லோருடைய கவனத்திற்கும் வந்திருக்கும் என்று நம்புகிறேன்.

தி.மு.க. தான் தன்னுடைய முதல் எதிரி என்றும்- அதை ஒழிப்பது தான் தன்னுடைய முக்கிய பணி என்றும் கூறியுள்ள டாக்டர் ராமதாஸ் அதற்காக அ.தி.மு.க.வுடனும் இந்த தேர்தலில் ரகசியமான கூட்டு சேர்ந்து பென்னாகரம் இடைத்தேர்தலை சந்திப்பார் என்பதற்கு ஆதாரம் அவரது பேச்சிலிருந்து தெரிகிறது.

இரண்டொரு வாரங்களுக்கு முன்பு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் பேசிய பேச்சுக்கும், அந்த பேச்சிலே இருந்த மென்மைக்கும் திடீரென்று' தீப்பொறி கக்க அவர் பென்னாகரத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கும்-மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருப்பதை உணர்ந்து நான் ஆச்சரியப்பட்டேன். அந்த ஆச்சரியத்தை போக்கியது அவருடைய கடந்த கால நடவடிக்கைகளும்-அறிக்கைகளும்-பேச்சுகளும் என்பதை அனைவரும் அறிவீர்கள்.

அ.தி.மு.க.வையும் கூட்டுச் சேர்த்து கொண்டு இந்த இடைத்தேர்தலிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனமானப் போக்கு அவர்களது வட்டாரத்தில் உருவாகியிருப்பதை நான் மட்டுமல்ல- நாளேடுகளில் அவருடைய அறிக்கைகளை-பேச்சுகளை படிப்பவர்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே, தேர்தல் களப்பணியாற்றும் கழக கண்மணிகளும்- தோழமை கட்சிகளின் நண்பர்களும்- செயல் வீரர்களும் என்ன தான் வன்முறைகளை அவர்கள் கட்டவிழ்த்து விட்டாலும், அவைகளைப் பொருட்படுத்தாமல் பதிலுக்கு பதில் என்ற நிலை உருவாகாத அளவுக்கு பண்போடும், அன்போடும். அமைதி காக்கும் மனத்தெம்போடும் வாக்காளர்களை சந்திப்பதிலும்-வெற்றி ஒன்றில் மட்டுமே நாம் நாட்டம் கொண்டு அராஜக ஆட்டம் போட திட்டம் தீட்டி செயல்படக்கூடிய தீய சக்திகளுக்கு-தீவிரவாத சக்திகளுக்கு சற்றேனும் இடம் தராமல் கருமமே கண்ணாயினர் என்ற முதுமொழிக்கேற்ப பணியாற்றி ஜனநாயகத்தை அலுங்காமல் குலுங்காமல் காத்திட வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.

போற்றுவோர் போற்றட்டும்- புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்- தொடர்ந்து செய்வோம் நம் பணியை என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+