இலங்கை, மாலத்தீவில் ஊடுறுவும் லஷ்கர்- அமெரிக்கா எச்சரிக்கை
கொழும்பு: பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு இலங்கையிலும், மாலத்தீவிலும் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் தெற்காசியாவில் தனது நிலையை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் அது ஈடுபட்டிருப்பதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். இது இந்தியாவுக்கு பெரும் மிரட்டலாக மாறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க பசிபிக் கமாண்ட் பிரிவின் கமாண்டரான அட்மிரல் ராபர்ட் வில்லர்ட் கூறுகையில்,
தெற்காசியாவில் தனது இருப்பை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது லஷ்கர். இதற்காக இலங்கையையும், மாலத்தீவையும் அது தனது புதிய களமாக தேர்வு செய்து செயல்பாடுகளை அங்கு விரிவுபடுத்தி வருகிறது.
இந்த நாடுகள் தவிர வங்கதேசம், நேபாளத்திலும் அது ஸ்திரமடைந்து வருகிறது. இந்த விரிவுபடுத்தும் முயற்சிகள் இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது.
மும்பைத் தாக்குதலுக்கு முக்கியக் காரணம் லஷ்கர் இ தொய்பாதான். பாகிஸ்தானிலிருந்தபடி செயல்பட்டு வரும் இந்த அமைப்பு தற்போது தெற்காசியா முழுவதையும் தனது செயல்பாட்டுக் களமாக மாற்ற முனைந்துள்ளது. இது நிச்சயம் இந்தியாவைக் குறி வைத்து எடுக்கப்படும் நடவடிக்கையாகவே தெரிகிறது.
இலங்கையிலும், மாலத்தீவிலும் இதன் செயல்பாடுகள் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதைத் தடுக்கவும், ஆசிய பசிபிக் பகுதியில் லஷ்கரின் நடமாட்டத்தை ஒடுக்கவும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
இலங்கையிலும், பிற தெற்காசிய நாடுகளிலும் லஷ்கர் நடமாட்டம் அதிகரித்திருப்பது நிச்சயம் இந்தியாவுக்கு பெரும் மிரட்டல்தான் என்றார் அவர்.
ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது விடுதலைப் புலிகள் வசம் இருந்த தமிழர்களை வலுக்கட்டாயமாக மீட்க இந்த அமெரிக்க பசிபிக் கமாண்ட் படைப் பிரிவின் உதவியை இலங்கை அரசு கோரியிருந்தது என்பது நினைவிருக்கலாம். ஆனால் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பு காரணமாக அமெரிக்க அரசு கடைசி நேரத்தில் பின்வாங்கியதாக அப்போது கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications