காலாவதியான மருந்து – தகவல் தருவோருக்கு ரூ. 25 லட்சம் பரிசு!
சென்னை: காலாவதி மருந்து குறித்து தகவல் தந்தால் ரூ.25 லட்சம் பரிசு தரப்படும் என சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கே.சுப்புராஜ் கூறினார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:
புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் போலி மருந்து தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்தத் தொழிற்சாலைகளில் இருந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் மருந்துகள் சென்றுள்ளன.
போலி மருந்துகளை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். காலாவதியான மருந்துகள் குறித்து தகவல் கூறினால் ரூ.25 லட்சம் பரிசு என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனையே தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது. காலாவதியான மருந்துகள் குறித்து தொலைபேசி மூலமும், கடிதங்கள் மூலமாகவும் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. தகவல்களைக் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு வரை, காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது காலாவதியான மருந்துகளை விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும்; ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
எம்.பி.பி.எஸ். பட்டம் பெறாமல் ஆங்கில மருத்துவம் செய்யும் போலி டாக்டர்கள் கைது செய்யப்படுவார்கள். திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் போலி டாக்டர்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது," என்றார் சுப்புராஜ்.












Click it and Unblock the Notifications