போலி மருந்து – சென்னை குரோம்பேட்டை மருந்து ஏஜென்சியில் ரெய்டு
சென்னை: போலி மருந்து பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு மருந்து ஏஜென்சியில் சிபிசிஐடி போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் போலி மருந்து மற்றும் காலாவதி மருந்து வேட்டையை சிபிசிஐடி போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி கையில் எடுத்துக் கொண்டது முதல் தினசரி பலர் கைதாகி வருகின்றனர்.
சமீபத்தில் கடலூரைச் சேர்ந்த செல்வ விநாயகா என்ற மருந்து ஏஜென்சியில் போலீஸார் ரெய்டு நடத்தி அதன் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் குரோம்பேட்டையில் உள்ள ஓவியா ஏஜென்சியினர், போலி மருந்துகளை வாங்கியது தெரிய வந்த்து.
இதையடுத்து இன்று காலை ஓவியா ஏஜென்சியில் சிபிசிஐடி போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர். 2 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.
சோதனையில் போலி மருந்துகள் எதுவும் சிக்கவில்லை. ஆனால் போலி மருந்துகளை வாங்கியது தொடர்பான ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கின.
இதையடுத்து ஓவியா ஏஜென்சியின் உரிமையாளர் ராஜேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், செல்வவிநாயகா ஏஜென்சியிடமிருந்து மருந்து வாங்கியது உண்மைதான். ஆனால் அவை போலி மருந்து எனத் தெரிய வந்த்தால் அவற்றைத் திருப்பி அனுப்பி விட்டோம் என்று ராஜேஷ் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications