தாண்டேவா படுகொலை: ப.சிதம்பரம் அறிக்கை தாக்கல் – பாஜக கடும் தாக்கு

தாண்டேவாடா படுகொலைகள், சசிதரூர் விவகாரம் மற்றும் விலைவாசி பிரச்னை ஆகியவை குறித்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் இன்று காலை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி கூடியது.
எதிர்பார்த்த படியே, இன்று காலை லோக்சபாவில் அவை கூடிய சிறிது நேரத்திற்க்கெல்லாம் பாஜக உறுப்பினர்கள் பிரச்னையை கிளப்பத் தொடங்கிவிட்டனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தின் தாண்டேவாடா பகுதியில் 70க்கும் மேற்பட்ட ரிசர்வ் போலீஸ் படையினர் கொல்லப்பட்டதற்கும், நக்சல் ஆதிக்கத்துக்கும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் இதுதொடர்பாக மதியம் 1 மணிக்கு அறிக்கை சமர்ப்பிப்பார் என லோக்சபா சபாநாயகர் மீராக்குமார் தெரிவித்தார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பி.கே.பன்சாலும், பாஜ உறுப்பினர்கள் அமைதியாக இருந்து கேள்வி நேரம் நடப்பதை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஆனால் பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியபடியே இருந்தனர். இதனால் அவை கூடிய உடனடியாக மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் பிற்பகலில் மீண்டும் ராஜ்யசபா கூடியது. அப்போது ப.சிதம்பரம் தாண்டேவாடா படுகொலை தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அப்போது தாண்டேவாடா படுகொலைச் சம்பவத்தை விவரித்தார். மேலும், நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியை செய்ய வேண்டியது மாநில அரசுகள்தான். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்.
உறுதியான தலைமை, வலிமையான இதயம், கூடுதல் அதிகாரம் ஆகியவை இருந்தால் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் வெற்றி பெற முடியும். இந்தப் பணியில் இந்தியா வெல்ல மக்கள் அரசுக்குத் துணை நிற்க வேண்டும் என்றார்.
அதன் பின்னர் விவாதம் தொடங்கியது. விவாத்த்தைத் தொடங்கி வைத்து பாஜக எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி பேசுகையில்,
கடந்த ஐந்து ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாடு முழுவதும் மாவோயிஸ்டுகள் வலுவடைந்துள்ளனர். முன்பை விட கூடுதல் பலம் பெற்றுள்ளனர்.
இவர்களை ஒடுக்க பாஜக முதல் சிபிஎம் வரை அனைவரும் ஒரே குரலில் ஆதரவைத் தெரிவித்து வருகிறோம். ஆனால் இந்த விஷயத்தில் மத்திய அரசிடம் சீரியஸ்னஸ் இல்லை.
நக்சலைட்டுகளுக்கு எதிரான போரில், அரசே பிளவுபட்டுக் கிடக்கிறது. மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரே ப.சிதம்பரத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். சொந்தக் கட்சிக்குள்ளேயே பலவிதமான குரல்கள். இப்படிப்பட்ட அரசை வைத்துக் கொண்டு எப்படி நக்சலைட்டுகளை நாம் ஒழிக்க முடியும்.
மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராட விலமையான அரசு நமக்குத் தேவை. மாவோயிஸ்டுகள் ஒரு அரசியல் இயக்கமாக செயல்படுகிறார்கள். அவர்களை கொள்கை ரீதியில் முறியடிக்க வேண்டும். புத்திசாலித்தனமான வன்முறையில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். அதை முறியடிக்க திறமையான திட்டமிடல்கள் வேண்டும்.
ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. அதை விரும்பவும் இல்லை. அப்படிச் செய்தால் அது நக்சலைட்டுகளுக்கு வெற்றியாகி விடும்.
ஒட்டுமொத்த நாடும், கட்சிகளும், மக்களும் நக்சலைட்டுகள் ஒழிய வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் அரசே முரண்பட்டுக் கிடக்கிறது. இது வேதனைக்குரியதாகும் என்றார் ஜேட்லி.
தாண்டேவாடா பிரச்னை மட்டுமல்லாது, சசிதரூர் விவகாரமும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை கொடுக்கும் என தெரிகிறது. எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக சசிதரூர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
விலைவாசி பிரச்னையை முன்னிருத்தி மத்திய அரசுக்கு எதிராக வெட்டுத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் வியூகங்களை எப்படி சமாளிப்பது என நேற்று முதலே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனையில் நடத்தி வந்தனர்.
மொத்தம் 543 உறுப்பினர்கள் கொண்ட அவையில் 256 எம்பிக்களின் பலம் கொண்ட காங்கிரஸ் தலைமையிலான ஐமு கூட்டணி அரசுக்கு, ஆட்சியை காபாற்றிக் கொள்வதில் அவ்வளவாக சிரமங்கள் இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் நிதி மசோதா ஆகியவற்றை மத்திய அரசு நிறைவேற்ற அவையில் சுமூக நிலை ஏற்பட்டாக வேண்டும்.












Click it and Unblock the Notifications