வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி? - சரத்குமார் பதில்
கோவை: வருகிற சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியில் பங்கேற்பதா என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று நடிகரும், சமக தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது.
இதில் கட்சியின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கட்சித் தலைவராக சரத்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொதுச் செயலாளராக கரு.நாகராஜன், பொருளாளராக தற்போதைய அவைத்தலைவரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான செல்வராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் அரசியல் ஆலோசகர்களாக ராதிகா சரத்குமார், ரவீந்திரன்துரைசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
துணைத்தலைவராக ஏ.நாராயணன், கொள்கை பரப்பு செயலாளராக ஜெயப்பிரகாஷ், துணை பொது செயலாளர்களாக ஏ.என்.சுந்தரேசன், முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன், வக்கீல் பன்னீர்செல்வம், சண்முகசுந்தரம், இளஞ்சேரன் தேர்வு செய்யப்பட்டனர்.
இளைஞர் அணி செயலாளராக கராத்தே சரவணன், இலக்கிய அணி செயலாளராக விவேகானந்தன் மற்றும் மண்டல அமைப்பு செயலாளர்களாக என்.சுந்தர், காளிதாசன், எஸ்.எஸ்.மணியன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கட்சியின் அனைத்து மாவட்ட தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பிறமாநில நிர்வாகிகள் அனைவரும் மீண்டும் அதே பதவியில் நீடிப்பார்கள் என்றும் பொதுக்குழுவில் பொது செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்தார்.
மின்வெட்டு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற மே 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், விவசாயத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும்; சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இலவசமாக டீசல் என்ஜின்கள், தேவையான அளவு உரம் வழங்கவேண்டும்;
மின்சார தட்டுப்பாட்டை போக்க காற்றாலை மின் உற்பத்தியை பெருக்குவதோடு, அனைத்து கட்டிடங்களிலும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறுவதை கட்டாயம் ஆக்கவேண்டும்;
கரும்பு விலையை டன்னுக்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும்; தென்னை, பனை மர தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்கும் விதத்தில் கள் இறக்க சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கவேண்டும்;
பள்ளி செல்லாத குழந்தைகள் இலவசமாக ஆரம்ப கல்வி பெறும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும்;
போலி மற்றும் காலாவதி மருந்து மோசடிகளை சி.பி.ஐ. விசாரித்து இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
திருநெல்வேலியில் ஜுலை மாதம் 18ம் தேதி காமராஜர் பிறந்தநாள் விழா, கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழா, கட்சி தலைவரின் பிறந்தநாள் விழா ஆகியவற்றை முப்பெரும் விழாவை நடத்துவது என்று பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு முன்னதாக சரத்குமார் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கையில்,
'வருகிற சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணியில் இடம்பெற்று போட்டியிடுவதா? என்று இப்போது முடிவு செய்யவில்லை.
கட்சி நடவடிக்கைகளில் சிலகாலம் தொய்வு ஏற்பட்டது. அந்த நிலை முதலில் மாறவேண்டும். அதற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நன்றாக உழைக்கவேண்டும் என்று கூறி உள்ளேன்.
நன்றாக உழைத்து நல்ல நிலைக்கு வந்தால் கூட்டணியில் சேர்க்க விரும்புபவர்கள் எங்கள் கட்சியை அவர்களாகவே தேடி வருவார்கள்.
நாமாக கூட்டணி, கூட்டணி என்று சென்றால் அது சரியல்ல. முதலில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அளவுக்கு நாங்கள் எங்களை உயர்த்திக் கொள்ளவேண்டும். கூட்டணியில் இடம்பெறுவது பற்றி விரைவில் அறிவிப்பேன்.
விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெறும் முழு அடைப்பில் நாங்கள் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக நாங்களே ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
நதிநீர் இணைப்பு சாத்தியம் இல்லை என்பதற்காக விட்டுவிடக்கூடாது. தென்னிந்திய நதிகளையாவது இணைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று சரத்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications