பவார், மல்லையா முயற்சிகள் தோல்வி-மோடி நீக்கப்படுவது உறுதி

கடைசியாக கிடைத்த தகவல்களின்படி கீழ்க்கண்ட உடன்பாட்டை சரத் பவாரும், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகரும் எட்டியுள்ளதாக தெரிகிறது.
- லலித் மோடி ஐபிஎல் தலைவர் மற்றும் ஆணையர் பதவியிலிருந்து விலக வேண்டும்.
- ஐபிஎல் நிர்வாகத்தைக் கவனிக்க புதிய ஆணையம் ஒன்றை அமைப்பது.
- ஐபிஎல் தலைமைப் பதவியை தற்போதைக்கு மனோகரே வகிப்பது
- மோடி விவகாரம் தொடர்பாக உள் மட்ட அளவில் விசாரணை ஒன்றை நடத்துவது.
வருகிற 26ம் தேதி ஐபிஎல் அமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இந்த முடிவுகள் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படவுள்ளதாம்.
பிரணாப்-ப.சிதம்பரம் கண்டிப்பான உத்தரவு:
முன்னதாக மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி மற்றும் ப.சிதம்பரத்தை பவார் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அப்போது இரு அமைச்சர்களும் மோடியை விலகுமாறு கூறுங்கள் என்று பவாரிடம் கண்டிப்பாக கூறி விட்டனராம். இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கைகளை மோடி சந்திக்க நேரிடும். அது அவரை விட கிரிக்கெட் வாரியத்தையும் ஐபிஎல்லையும் கடுமையாக பாதிக்கும் என்றும் பிரணாப் கூறியதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்தே மோடிக்கு ஆதரவான நிலையை பவார் மாற்றிக் கொண்டதாக தெரிகிறது.
லலித் மோடிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களில் பெரும்பாலானோர் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் கடைசி வரை அவரை தாங்கிப் பிடித்து வந்தார் பவார்.
முன்னதாக மோடியை நீக்கும் விவகாரம் தொடர்பாக சரத் பவாருடன் விவாதிப்பதற்காக கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் டெல்லி வந்தார். பின்னர் அவர் பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மனோகருடனான சந்திப்பைத் தொடர்ந்து இன்று மாலை துபாயிலிருந்து திரும்பும் மோடியும், பவாரை சந்திக்கவுள்ளார்.
துபாயில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்றிருந்தார். பவாரை சந்தித்த பின்னர் மோடி தனது ராஜினாமா கடித்த்தை வழங்குவார் என்று தெரிகிறது.
ஒரு வேளை மோடி விலகாவிட்டால் அவர் டிஸ்மிஸ் செய்யப்படலாம்.
முன்னதாக புனே அணியை வாங்கியுள்ள சஹாரா நிறுவனமும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளரான விஜய் மல்லையாவும் பகிரங்கமாக லலித் மோடிக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.
மோடிக்கு மல்லையா, சஹாரா முழு ஆதரவு:
கொச்சி அணி வாங்கப்பட்டபோது கூடவே புனே அணியும் ஏலத்தில் விடப்பட்டது. புனே அணியை இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரான சுப்ரதோ ராயின் சஹாரா குழுமம்தான் வாங்கியுள்ளது.
இந்த நிலையில் சமீபத்திய சர்ச்சையில் மோடிக்கு ஆதரவாக மல்லையாவும், ராயும், கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மல்லையா கூறுகையில், மோடி ஐபிஎல் நிர்வாகத்தை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த அமைப்பை சிறந்த ஒரு விளையாட்டு அமைப்பாக உருவாக்கியவர் அவர்தான். மிகச் சிறந்த நிர்வாகி அவர் என்றார்.
ராய் கூறுகையில், எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, ஒன்றை மட்டும் யாரும் மறக்கக் கூடாது. ஐபிஎல்லுக்காக நிறையச் செய்துள்ளார் மோடி. அதை யாரும் மறந்து விடக் கூடாது என்றார் ராய்.
மல்லையா தொடர்ந்து கூறுகையில், கிரிக்கெட் வாரியத்துயம், ஐபிஎல்லையும் நாட்டுடமையாக்க வேண்டும் என்பது கேலிக்கூத்தானது. எந்த நாட்டிலும் விளையாட்டு நாட்டுடமையாக்கப்பட்டதில்லை. மேலும் விளையாட்டு என்பது அரசின் எந்தவிதமான தலையீடும் இல்லாமல் நடைபெற வேண்டும்.
சூதாட்டம் என்பது எல்லா நாட்டிலும்தான் உள்ளது. மும்பையில் ரூ. 1000 கோடி அளவுக்கு மத்கா நடந்து கொண்டுள்ளது. இந்தியாவில் எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி அது புகழ் பெற்றதாக இருக்கும்போது அதை வைத்து சூதாட்டம் நடைபெறுவது சகஜமானது. சூதாட்டத்தை ஒழிக்க அரசு விரும்பினால் அதை சட்டப்பூர்வமானதாக மாற்றி விடுவதே நல்லது.
கொச்சி அணி பெரும் தொகைக்கு ஏலம் போனதால் மற்ற அணிகளின் உரிமையாளர்கள் கவலையில் உள்ளதாக கூறப்படுவதில் உண்மையே இல்லை என்றார் மல்லையா.
மல்லையா- மோடி என்ன தொடர்பு?:
மோடிக்கு ஆதரவாக விஜய் மல்லையா களத்தில் குதித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மல்லையாவின் வளர்ப்பு மகள் லைலா மகமூது மோடியிடம் வேலை பார்த்து வருகிறார். மோடி அலுவலகத்திற்கு வருமான வரித்துறையினர் வருவதற்கு முன்பு லேப்டாப் மற்றும் கோப்புகளுடன் அவர் வெளியேறியது தெரிய வந்தது.
லைலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வாக்குமூலமும் பெற்றனர்.
தற்போது மல்லையா மோடிக்கு தீவிர ஆதரவு தெரிவித்திருப்பதைப் பார்க்கும்போது மோடியுடனான மல்லையாவின் தொடர்பு அழுத்தம் திருத்தமானது என்று புரிய வருகிறது.
மோடிக்கு எதிராக எத்தனை பேர்?:
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகக் கவுன்சிலில் மொத்தம் 14 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் வாரியத் தலைவர் மனோகர், செயலாளர் சீனிவாசன், சஞ்சய் ஜகதாலே, நிரஞ்சன் ஷா, ராஜீவ் சுக்லா, சிரயு அமின், அருண் ஜெட்லி ஆகியோர் மோடிக்கு எதிராக தீவிரமாக உள்ளனர்.
சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, மன்சூர் அலி கான் பட்டோடி ஆகியோர் பெரும்பான்மை யாருக்கு உள்ளதோ அவர்கள் பக்கம் சாய்வார்கள்.
மோடிக்கு ஆதரவாக உள்ள ஒரே ஒருவர் ஐ.எஸ்.பிந்த்ரா மட்டுமே. பரூக் அப்துல்லா, எம்.பி.பான்டோவ் ஆகியோர் ஒரு வேளை மோடிக்கு ஆதரவாக மாறக் கூடும். 14வது உறுப்பினர் மோடி.












Click it and Unblock the Notifications