போலி கல்விச் சான்றிதழ் தயாரித்த நபர் கைது – காங். பிரமுகரிடம் விசாரணை
நெல்லை: நெல்லை அருகே போலி கல்வி சான்றிதழ் தயாரித்தவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக காங் பிரமுகர் உள்பட 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக போலி சான்றிதழ் விற்கப்படுவதாக தலைமை ஆசிரியர் பேரிண்பராஜ் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக எஸ்பி ஆஸ்ரா கர்க உத்தரவின் பேரில் மானூர் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கீழபாட்டத்தை சேர்ந்த கணேசன், என்பவர் போலியாக சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த நாஞ்சான்குளம் நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரின் போலி சீல், மற்றும் ஏராளமான போலி சான்றிதழ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கணேசன் கீழப்பாட்டத்தை சேர்ந்த இசக்கி முத்து மகன் லட்சுமணன் என்பவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதாக போலி சான்றிதழ் கொடுத்துள்ளார். இதை வைத்து அவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இதே போல் கணேசன் பலரிடம் பணம் வாங்கி கொண்டு நாஞ்சான்குளம் பள்ளியில் படித்தது போல் சான்றிதழ் கொடுத்துள்ளார்.
இதையடுத்து கணேசனை கைது செய்த போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்ததாக தருவையை சேர்ந்த காங் பிரமுகர் உள்பட 7 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சான்றிதழ் வாங்கிய லட்சுமணன் மீதும் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். கணேசனிடம் போலி சான்றிதழ் வாங்கியவர்கள் அதனை வைத்து அரசு வேலைக்கு சென்றுள்ளார்களா, என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications