முல்லைப் பெரியாறு பிரச்சனை: தென் தமிழக மக்களின் எதிர்காலம் கேள்விக்குறி-விஜயகாந்த்
சென்னை: முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தென் தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது என்று தேமுகதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
10.11.2009 அன்று முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச சீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து 6 மாதங்களில் அறிக்கை தர உத்தரவிட்டது. முதல்வர் கருணாநிதி இது குறித்து தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்று சொல்லி யாரிடம் போய் முறையிடுவது என்று கூறினார்.
20.2.2010 அன்று அவர் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக அரசு எதையும் விட்டுக் கொடுக்கவில்லை என்றார்.
அன்று பொதுக் குழுவில் உச்ச நீதிமன்றம் அமைத்த ஐவர் குழுவில் தமிழக அரசு இடம் பெறக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றினார்.
8.03.2010 அன்று உச்ச நீதிமன்றத்தின் இந்த ஐவர் குழுவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.
21.04.2010 அன்று உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள ஐவர் குழுவில் தமிழ்நாட்டின் சார்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி இடம் பெறுவார் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த நிலைக்கு காரணம் என்ன?. முல்லைப் பெரியாறு குறித்த வழக்கின் முடிவு தான் தமிழகத்திற்கு முக்கியம் என்பதால் இந்த முடிவை மேற்கொண்டதாக கருணாநிதி அறிவிக்கிறார்.
ஆனால், இதை முதலிலேயே எதிர்க்கட்சி தலைவர்கள் எடுத்துக் காட்டியபோது அதை கருணாநிதி கிண்டல் அடித்தது ஏன்?.
உச்ச நீதிமன்றம் முல்லைப்பெரியாறு வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்கும் என்று உத்தரவிட்டபோது தமிழ்நாடு அரசு சம்மதித்துள்ளது.
ஐவர் குழுவை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு 29.03.2010 அன்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அன்றைய தினம் ஐவர் குழுவிற்கு ஒப்புக் கொண்டு விட்டு இன்று அதை நீக்கச் சொல்வதா? என்று கண்டித்தனர்.
அது மட்டுமல்லாமல் யாரையும் திருப்திபடுத்துவது உச்ச நீதிமன்றத்தின் வேலையல்ல, எது சரி என்று படுகிறதோ அதற்கேற்ப ஆணை பிறப்பிப்பதுதான் உச்ச நீதிமன்றம் என்று எச்சரித்து தமிழக அரசின் மனுவை நிராகரித்துள்ளனர்.
ஏப்ரல் 30ம் தேதிக்குள் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு கட்டுப்பட்டே தமிழக அரசு இப்போது தனது பிரதிநிதியை நியமித்துள்ளது.
இந்தப் பிரச்சனையில் ஆரம்பம் முதலே திமுக அரசு குழப்பத்தில் இருந்துள்ளது. அதன் விளைவுதான் நேரத்திற்கு நேரம் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. ஒரு புறத்தில் கேரள அரசு புதிய அணை கட்டியே தீருவேன் என்கிறது. மறுபுறத்தில் இந்திய அரசு வாய் மூடி மவுனியாக உள்ளது.
கொஞ்ச நஞ்சம் உதவிய உச்ச நீதிமன்றத்தையும் தமிழக அரசு தனது முரண்பட்ட போக்கால் எரிச்சல் மூட்டிவிட்டது. இந்த சூழ்நிலையில் முல்லைப் பெரியாறு நீரை நம்பியுள்ள தென் தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
மின்வெட்டு.. விசிறி, மெழுகுவர்த்தி தரும் தேமுதிக:
இந் நிலையில் தமிழகத்தில் தொடர் மின்வெட்டை கண்டிக்கும் வகையில் வீடுதோறும் ஓலை விசிறி மற்றும் மெழுகுவர்த்திகளை கொடுத்து வருகின்றனர் திருச்சி தேமுதிகவினர்.
திருச்சி தேமுதிக மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சித்ரா, மாநகர செயலாளர் விஜயராஜன் ஆகியோர் திருச்சி 51வது வார்டில் ஓலை விசிறியும், மெழுகுவர்த்தியும் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications