பிரமிட் பார்க்கப் போன ஏர் இந்தியா ஊழியர்கள் – விமான நிலையத்தில் 16 மணி நேரம் தவித்த பயணிகள்
கெய்ரோ: நாடு திரும்புவதற்காக பயணிகள் அனைவரும் காத்திருக்க, விமான ஊழியர்கள் பிரமிட் பார்க்கப் போய் விட்டதால் கிட்டத்தட்ட 16 மணி நேரம் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர் ஏர் இந்தியா பயணிகள், கெய்ரோவில்.
அந்த விமானம் மும்பையிலிருந்து டொரன்டோவுக்கு செல்லக் கூடியது.கடந்த ஏப்ரல் 15ம் தேதி இந்த விமானம் சிலகாரணங்களால் கெய்ரோ வழியாக பிராங்க்பர்ட்டுக்கு திருப்பி விடப்பட்டது.
கெய்ரோவுக்கு வந்த விமானம் கிளம்பவில்லை. அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என பயணிகள் நினைத்தனர். ஆனால் பைலட் விமானத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த பயணிகள், மற்ற 7 ஊழியர்களையும் காணாமல் குழம்பினர்.
இப்படியாக சில மணி நேரம் கழிந்த நிலையில், பயணிகள் பொறுமை இழந்து என்ன நடக்கிறது என்று பைலட்டிடம் விசாரித்தபோதுதான், ஊழியர்கள் 7 பேரும் பிரமிட் பார்க்க போயிருப்பதும், அவர்கள் வந்த பிறகே விமானத்தைக் கிளப்ப முடியும் என்பதும் தெரிய வந்தது.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் பயணிகள். தங்களைக் காக்க வைத்து விட்டு ஊழியர்கள் ஊர் சுற்றப் போனது அவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட 16 மணி நேரம் விமானத்தில் தவித்ததாக பயணிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நடந்த சம்பவம் உண்மைதான். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சர்ச்சையில் சிக்கிய விமான ஊழியர்களில் ஒருவர் கூறுகையில், நாங்கள் பிரமிட் பார்க்கப் போனது உண்மைதான். ஆனால் 16 மணி நேரம் தாமதமானது என்பதில் உண்மையில்லை. 5 மணி நேரம்தான் தாமதமானது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications