கடலில் மூழ்கி 12 பேர் பலி - ரூ. 32 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
தூத்துக்குடி: தூத்துக்குடி கடலில் 12 பேர் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 12 பேரின் குடும்பங்களுக்கும் ரூ.32 லட்சம் நஷ்ட ஈடு வழங்கும்படி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி கிரோப் தெருவை சேர்ந்தவர் அன்டோ விக்டோரியா. இவர் சொந்தமாக தோனி வைத்து தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மலேசியா, மாலத்தீவு, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு காய்கறி ஏற்றுமதி செய்து வந்தார்.
11.9.99 அன்று இவருக்கு சொந்தமான மரிய ஆண்டோராஜ் என்ற தோனியில் வெங்காயம் மற்றும் உருளை கிழங்குகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு புறப்பட்டனர். இதில் மாலுமி உள்பட 12 தொழிலாளர்கள் இருந்தனர்.
கப்பல் தூத்துக்குடியில் இருந்து 20 கிமீ தூரம் சென்ற நிலையில் திடீரென ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் முழ்கும் நிலைமை ஏற்பட்டது. இதை தொடர்ந்து மாலுமி தனிஸ்லால், தூத்துக்குடி துறைமுக அவசர கால மீட்பு மையத்திற்கு வயர்லஸ்சில் தொடர்பு கொண்டு நாங்கள் மூழ்கி கொண்டு இருப்பதாகவும், காப்பாற்றும்படியும் கூறினார்.
ஆனால் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் துறைமுக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தோணியில் சென்ற மாலுமி தனிஸ்லால், அந்தோணி, ஜான்டோ, ரோலண்ட், சுபிகர், ராயன், அந்தோணி ராஜ், ஜோசப் உள்ளிட்ட 12 பேர் கடலில் மூழ்கி இறந்து விட்டனர். இதில் ஜோசப் உடல் மட்டும் கரை ஓதுங்கியது. மற்ற 11 பேரின் உடல்கள் கிடைக்கவில்லை.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை. இதை தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி 2 விரைவு நீதிமன்றத்தில் 2003ம் ஆண்டு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். 12 குடும்பத்தினரும் தனித்தனியாக தொடர்ந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலயில், ஒரே நேரத்தில் 12 வழக்குகளிலும் நேற்று தீ்ர்ப்பு வழங்கப்பட்டது. 12 பேர் குடும்பத்திற்கும் தூத்துக்குடி துறைமுகம் ரூ. 32 லட்சத்து 67 ஆயிரத்து 500 கொடுக்க வேண்டும் என்று நீதிபதி கிருஷ்ணவேணி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications