'மேலவையை கலைக்காதீர்கள், நான் விலகி விடுகிறேன்'!

Subscribe to Oneindia Tamil

Karunanidhi with MGR
சென்னை: என்னால் தான் மேலவை கலைக்கப்படுகிறது என்றால் நான் பதவி விலகி விடுகிறேன், அவையைக் கலைத்து விடாதீர்கள் என்று 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கடைசி மேலவை கூட்டத்தில் பேசியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

1986ம் ஆண்டு மே 13ம் தேதி தமிழக மேலவையைக் கலைக்க முதல்வராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் முடிவு செய்து தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது அந்தத் தீர்மானத்தை எதிர்த்து அப்போதைய மேலவை எதிர்க் கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி பேசியதாவது:

மேலவையைக் கலைப்பது என்கின்ற தீர்மானம் சட்டமன்ற பேரவையிலே வருகிறது என்ற இந்தப் பிரச்சனையின் மீது நான் முதலிலே ஒன்றை தெளிவாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இப்போது நான் எனக்காக வாதாட விரும்பவில்லை. அப்படி வாதாடப் போவதுமில்லை. எனக்காக வாதாடுவது என்னுடைய வழக்கமும் இல்லை. நான் இப்போது வாதாடுவது இந்த மன்றத்துக்காக, கடந்த 60 ஆண்டு காலத்திற்கும் மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளும், மாண்புகளும் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

பல நேரங்களில் மேலவை தேவையா என்ற பிரச்சனை எழுந்திருக்கிறது. அதை நான் மறுக்கவில்லை. அப்படிப்பட்ட நேரங்களில் எல்லாம் தேவையா என்ற கேள்விக்குறி வலுப்பட்ட காலக்கட்டத்திலேகூட இறுதி முடிவாக தேவைதான், நீடிக்கட்டும்' என்ற முடிவுகள்தான் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அண்ணா முதல்வராக, இந்த மன்ற உறுப்பினராக பொறுப்பேற்று இந்த மன்றத்திலே அமர்ந்தார். அவர் அப்படி ஒரு மேலவை உறுப்பினராக வந்து அமராமலேயே ஒரு சட்டமன்ற உறுப்பினரை பதவி விலக சொல்லிவிட்டு அந்த இடத்தில் நின்று பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்றப் பேரவையிலே பொறுப்பேற்று முதல்வராக வந்திருக்க முடியும். ஆனால், மாநகராட்சி உறுப்பினர்கள் வாக்குகளை பெற்று மேலவையில் அண்ணா அமர்ந்தார்.

அப்போது இந்த மேலவையில் ஆர்.வெங்கட்ராமன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை பெற்றிருந்தது. அப்படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சியாக இருக்கின்றதே என்ற எண்ணத்தில் மேலவையைக் கலைத்துவிட வேண்டும், நமக்கு ஒரு கண் போனாலும், எதிரிக்கு இரண்டு கண்கள் போக வேண்டும்' என்ற எண்ணம் அண்ணா காலத்திலே வரவில்லை.

அமைச்சரவை கூடி ஆழ்ந்து யோசிக்காமல், தேர்தல் அறிக்கையிலேகூட குறிப்பிடாமல், இதுபற்றி கருத்தோட்டம் என்கின்ற வகையிலே மக்கள் மத்தியிலே இதை வைக்காமல், திடீரென்று, அமைச்சரவையிலே ஆலோசிக்காமல், பத்திரிகையிலே வந்த செய்தியை வைத்து உறுப்பினர் ரகுமான்கான் விளக்கம், வினா கேட்க, நிதியமைச்சர் அதைப் பற்றி கொள்கை இருக்கிறது, முடிவாகவில்லை' என்று சொல்லி, இந்த அவையிலே 2 நாட்களில் தெரியும்' என்று சொல்லி, திடீரென்று இன்றைக்கு இந்தத் தீர்மானம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இப்படி நிகழப் போகிறது என்று 3 நாட்களுக்கு முன்பே எனக்குத் தெரியும். அமைச்சரவை கூடி இப்படிப்பட்ட கொள்கை முடிவை எடுக்க வேண்டுமென்ற நியதி ஏன் மீறப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.
பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் சொன்னார், கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராகிவிட்ட காரணத்தால்தான் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதென்று.

4 தொகுதிகளிலிருந்தும் 4 பேர் வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். ஆனால் யார் எந்தக் கட்சி என்று கூட நான் குறிப்பிட விரும்பவில்லை. நான் இந்த அவையிலே பேசுகின்ற பாணி, எடுத்துக் கொள்கின்ற முறை, அந்த அவையிலே நான் பேசியிருக்கின்ற முறை இவைகளுக்கு உள்ள வேறுபாடுகளை தலைவரும், உறுப்பினர்களும், அமைச்சர்களும் கூட உணர்ந்திருக்கக் கூடும். ஏனென்றால் இந்த அவை அப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்க ஓர் அவை.

டாக்டர் ஏ.எல்.முதலியார் போன்றவர்கள், அண்ணா போன்றவர்கள், மூதறிஞர் ராஜாஜி போன்றவர்கள், பாலசுப்பிரமணிய ஐயர் போன்றவர்கள், ஏன் தங்களைப் போன்றவர்கள் எல்லாம் இருக்கிற இந்த அவைக்கு என்று தனி மதிப்பு இருக்கிற காரணத்தினால்தான், இந்த அவையிலே எப்படி அணுகுமுறை இருக்க வேண்டும். குற்றச்சாட்டு இருந்தாலும் எந்த அணுகுமுறையோடு சொல்ல வேண்டும் என்பதை எல்லாம் எண்ணி, மிகுந்த எச்சரிக்கையோடு இந்த அவையில் நான் பேசியிருக்கிறேன் என்பது நான் 7, 8 தடவை பேசியிருக்கின்ற பேச்சுகளை எடுத்துப் படித்துப் பார்த்தாலே, மிக நன்றாகத் தெரியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது கொள்கை ரீதியாக, காலையில் அரும்பி, பகல் எல்லாம் மலராகி, மாலையில் மலர்ந்தது என்று சொல்லத் தக்க அளவில் இந்த கொள்கை மலர்ந்தது என்றும் யாரும் கூற முடியாது. அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அப்படி அறிகுறி இருந்திருந்தால், அண்மையில் கூட 3 பேர் நியமனம் செய்யப்பட்டிருக்கமாட்டார்கள். ஒருவர் ராஜினாமா செய்துவிட்டார் என்பது வேறு விவகாரம். ஆனாலும் நியமனம் செய்யக்கூடிய அளவுக்குக்கூட பரிந்துரை செய்யப்பட்டு நியமனங்கள் செய்யப்பட்டு, நாளைய தினம் விடைபெற, ஓய்வு பெற இருக்கிற உறுப்பினர்களுக்கு எல்லாம் பாராட்டு விழா என்ற அளவிலே, விருந்து, அவர்களுக்கு எல்லாம் நாளை பாராட்டு என்று எல்லாம் சொல்லக்கூடிய சூழ்நிலையில் நிகழ்ச்சி நிரல் வைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

நாளைக்கு இவர்களை எல்லாம் பாராட்டும்போது, அவர்கள் இன்றைக்கு எங்களை பாராட்டுகிறாய், நாளைக்கு எங்களோடு நீயும் வரப் போகிறாய்', என்கிற கண்ணோட்டத்தோடு தானே எங்களைப் பார்ப்பார்கள். நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். எனக்காக நான் வாதாடவில்லை. இந்த மன்றத்திற்காக நான் வாதாடுகிறேன்.

இங்கே பி.டி.ஆர். குறிப்பிட்டதுபோல், ஏதோ எனக்காகத்தான், நான் எதிர்க் கட்சித் தலைவன் ஆனேன் என்ற காரணத்தால்தான், இப்படி ஒரு தீர்மானம் வருகிறது என்றால், நான் இந்த மன்றம் நீடிக்க வேண்டுமென்ற அந்தக் காரணத்திற்காக, எனக்காகத்தான் இது வருகிறது என்ற ஒரு நிலை இருக்குமானால், என்னுடைய இந்த பதவியை இந்த மன்றம் நீடிக்க வேண்டும் என்பதற்காக நான் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். என்னால் இந்த மன்றம் நீடிக்காமல் கலைக்கப்படுகிற சூழ்நிலைக்கு ஆளாக வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த கருத்தை நான் எடுத்துக் கூறுகிறேன்.

இதற்கு பிறகாவது முதல்வர், கருணாநிதி ஒழிந்தான், அவன் இல்லாத சபை தான் இது' என்ற எண்ணத்தோடு இந்த மன்றத்தை நீட்டிப்பதற்கு முற்படுவார்கள் என்று கூறிக் கொள்கிறேன்.

இவ்வாறு பேசியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+