சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் வரை பதவிக்காலம் உள்ளது. ஆனாலும் சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இதை முதல்வர் கருணாநிதி மறுத்துள்ளார். கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி இன்று நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந் நிலையில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு முதல்வர் அளி்த்துள்ள சிறப்புப் பேட்டி:

கேள்வி: சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறதே?

முதல்வர் கருணாநிதி: இதுவரை அத்தகைய எண்ணம் எனக்குள் எழவில்லை. பத்திரிகைக்காரர்கள்தான் அது பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்:

கேள்வி: ஜூன் மாதம் கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வுப் பெறப்போவதாக கூறினீர்கள். அந்த முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா?

கருணாநிதி: எனது அரசு அலுவலக பணிகள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள என் வாழ்நாள் முழுவதையும் மக்களோடு நெருங்கிச் சென்று சமுதாயப் பணி ஆற்ற வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று என்னோடு இருப்பவர்கள் விரும்புகிறார்கள். இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியா?:

கேள்வி: மேற்கு வங்க மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசு 5 முறை முதல்வராக இருந்து சாதனை படைத்தார். தற்போது 5வது முறையாக முதல்வர் பதவி வகிக்கும் நீங்கள் 2011ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு 6வது முறையாக முதல்வராகி இந்தியாவில் எந்த கட்சித் தலைவரும் செய்யாத சாதனையை படைக்க வேண்டும் என்று திமுகவினர் விரும்புகிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

கருணாநிதி: ஜோதிபாசு எனது நெருங்கிய நண்பராக இருந்தார். மக்களுக்கு சேவையாற்றுவதில் நண்பர்களுக்குள் போட்டி வருவது நல்ல விஷயம்தானே. என்றாலும் தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது பற்றி நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

குடும்பத்தில் குழப்பமோ, தகராறோ கிடையாது:

கேள்வி: துணை முதல்வராக மு.க.ஸ்டாலினை நீங்கள் அறிவித்ததும், அவர்தான் திமுகவின் அடுத்த தலைவர் என்று எல்லாரும் கருதுகிறார்கள். ஆனால் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சொன்ன சில கருத்துக்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளதே. இது திமுகவை பலவீனப்படுத்திவிடாதா?

கருணாநிதி: நிச்சயமாக இல்லை. எனது குடும்பத்தில் எந்த குழப்பமோ, தகராறோ கிடையாது. பத்திரிகைகாரர்கள்தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுகவையோ, அதன் தலைமையையோ, பலவீனப்படுத்தும் செயல்களில் என்னுடைய குடும்பத்தினர் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள்.

யூகமான செய்தி:

கேள்வி: மு.க.அழகிரி மாநில அரசியலுக்கு திரும்பப் போவதாகவும், கனிமொழி மத்திய அமைச்சராகப் போவதாகவும் யூகத்தின் அடிப்படையில் செய்திகள் வருகிறதே?

கருணாநிதி: நீங்களே சொல்லிவிட்டீர்களே, அது பத்திரிகைகளின் யூகமான செய்தி என்று.

கேள்வி: திமுகவினர் யாரும் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது என்று சமீபத்தில் உத்தரவிட்டீர்கள். அதற்கு என்ன காரணம்?

கருணாநிதி: இந்த உத்தரவில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. கட்சியில் ஒழுக்கத்தை நிலை நிறுத்தவே அந்த உத்தரவு. திமுக தன் கருத்துக்களை வெளியிடும்போது ஒரே குரலில் ஒலிக்க வேண்டும். பல குரல்கள் பல விதத்தில் ஒலிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. பல குரல்கள் ஒலித்தால் அது அபஸ்வரமாகி விடும். எனவே உறுதியான அரசியல் நடவடிக்கைக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

திமுகவுக்கு நான் தலைவராக இருந்தாலும் கூட, கட்சியில் எல்லா முடிவுகளும் பொதுக்குழு, செயற்குழுவை கூட்டி எடுக்கப்படுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அது போல நான் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கும்போது பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் மூத்த தலைவர்கள் என் அருகில் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

கட்சியில் ஒழுக்கமின்றி நடந்து கொள்வதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். அது ஒரு காலத்திலும் நடக்காது.

அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டா?:

கேள்வி: பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சில மாதங்களாக திமுகவுடன் நல்லுறவில் இருக்கிறது. ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் ஒரு இடத்தை நீங்கள் டாக்டர் அன்புமணிக்கு கொடுக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறதே?

கருணாநிதி: ராஜ்யசபா எம்.பிக்களைத் தேர்வு செய்ய வரும் 31ம் தேதி தேதி மனுத் தாக்கல் தொடங்குகிறது. ஜூன் மாதம் 7ம் தேதி மனு தாக்கல் முடிகிறது. அதன் பிறகு இந்த கேள்விக்கு உங்களுக்கு விடை கிடைத்துவிடும்.

ஆட்சியில் அதிகார மையங்கள் இல்லை:

கேள்வி: உங்கள் ஆட்சியில் அதிகார மையங்கள் நிறைய உள்ளதாகவும், நிர்வாகத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் அவற்றின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?

கருணாநிதி: குற்றம் சாட்டாவிட்டால், பின்னர் எப்படி அவை எதிர்க்கட்சிகளாக இருக்க முடியும்? அதிகார மையங்கள் என்பதில் அர்த்தமும் இல்லை, அடிப்படையும் இல்லை.

கேள்வி: முன்பெல்லாம் தேர்தல் களம் என்பது கொள்கைப் பிரச்சாரம், வாதம், எதிர்வாதம் என அமர்க்களப்படும். ஆனால் இப்போது ஏராளமாக பணம் புழங்குவதும், வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற காரணியாக பணபலம் மாறிவிட்டதற்கான சூழல் தென்படுகிறது. வாக்காளர்களே பணம் கேட்கும் நிலை ஏற்படுவதாக தேர்தல் அதிகாரிகளே வருந்துகிறார்கள். இது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதா?

கருணாநிதி: காலக்கணக்கெடுத்திட, நீங்கள் நண்பர் சோ அந்தக் காலத்தில் நடத்திய 'சம்பவாமி யுகே யுகே' நாடகத்தைப் பார்த்திருக்க வேண்டும்.

சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் டோனி:

கேள்வி: நீங்கள் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது நேரில் சென்று கண்டு ரசிக்கவும் நீங்கள் தவறுவதில்லை. டுவண்டி20 போட்டி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?. உங்களைக் கவர்ந்த வீரர்கள் யார்?

கருணாநிதி: டுவண்டி 20 போட்டிகளில் விளையாட்டு வீரர்களின் திறமையைப் பொறுத்து முடிவுகள் அமைய வேண்டுமே தவிர- சூதாட்டக்காரர்களின் முடிவுகளாக அமைந்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். தொடர்ந்து டெண்டுல்கர் பொறுப்புணர்வோடு விளையாடுவது என்னைக் கவர்ந்த ஒன்றாகும். அண்மைக் கால வீரர்களைச் சொல்ல வேண்டுமானால் சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் டோனி, ஷேர்ன் வாட்சன், காலீஸ் போன்றவர்கள் என்னைக் கவர்ந்தவர்கள்.

கேள்வி: நான்காண்டு கால ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவச டி.வி., கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை, சட்டமன்றக் கட்டடம், வீட்டு வசதித் திட்டம் என சாதனைப்பட்டியல் நீளமானது. இதில் உங்களைக் கவர்ந்தது எது?

கருணாநிதி: ரோஜா தோட்டத்தில் உங்களைக் கவர்ந்த ரோஜா எது எனக் கேட்பதைப் போல இருக்கிறது.

பார்வதி அம்மாள்..திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள்:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சனை ஒரு துயரமான முடிவுக்கு வந்திருக்கிறது. அந்நாட்டில் போர் முடிந்து, இரு தேர்தல்கள் நடந்துள்ள நிலையிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவும் அரசியல் தீர்வு ஏற்படவும் இந்தியாவின் நடவடிக்கைகளில் மெத்தனமும் அலட்சியமும் தென்படுகிறதே?

கருணாநிதி: இலங்கைத் தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும், அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அமைதியான நல்வாழ்வு வாழ வேண்டும், அவர்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் இங்குள்ள மத்திய, மாநில அரசுகளின் பெரு விருப்பமாகும்.

இலங்கை ஒரு அன்னிய நாடு என்கிற போதுதான், அவர்களின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் நாம் தலையிடும்போது முள்ளில் விழுந்த துணியை, கிழியாமல் எடுப்பது போல் எடுக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, இங்குள்ள ஒருசில அரசியல்வாதிகள் உள்நோக்கங்களோடு, ஏதோ அவர்கள் தான் இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்களைப் போல நடிக்கிறார்களே தவிர, வேறொன்றும் இல்லை. உதாரணமாக பார்வதி அம்மாள் பிரச்சனையையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை.

இருந்தாலும் ஒருசிலர் தங்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக அந்த அம்மையாரின் உடல் நிலையை வைத்து தாங்கள் தான் அவர்மீது அக்கறையும், பாசமும், பற்றும் உள்ளவர்கள் என்பதைப்போல திட்டமிட்டு எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரிய அண்ணன் காங்கிரஸ்:

கேள்வி: இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் கர்வத்துடனும்- பெரிய அண்ணன் போக்கில் நடந்து கொள்வதாகவும் டெல்லி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்னையார் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில்கூட தமிழக அரசோடு கலந்தாலோசிக்கவில்லை என்று திமுக குற்றம்சாட்டி இருக்கிறது. திமுக-காங்கிரஸ் உறவு எப்படி இருக்கிறது? 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த உறவு நீடிக்குமா?

கருணாநிதி: இது ஏதோ உள்நோக்கத்தோடு கேட்கப்படுகின்ற கேள்வியைப் போல உள்ளது. இருந்தாலும் பதில் கூறுகிறேன். காங்கிரசிடம் எந்தக் கர்வமும் ஏற்படவும் இல்லை. பெரிய அண்ணன் போக்கில் அவர்கள் நடந்து கொள்ளவும் இல்லை. இவை வெறும் கற்பனை. அண்மையில் நான் டெல்லி சென்றிருந்த போது கூட, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மிகுந்த அன்போடு என்னை வரவேற்றார்கள். பிரபாகரனின் அன்னையார் விவகாரத்தில் கூட தமிழக அரசோடு மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று திமுக தரப்பில் யாரும் குற்றம் சாட்டவில்லை. பிரபாகரனின் அன்னையார் தரப்பிலிருந்து தான் யாரும் தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் நீங்கள் வேண்டுமென்றே அனைத்தையும் மாற்றி கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.

திமுக-காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளது. 2011ம் ஆண்டு தேர்தலிலும் இந்த உறவு நல்லவிதமாக நீடிக்கும்.

சின்சியாரிட்டியோடு இணைந்த சீனியாரிட்டி:

கேள்வி: ஜெயலலிதாவுக்கு சின்சியாரிட்டி பிடிக்கும். உங்களுக்கு சீனியாரிட்டி பிடிக்கும் என்பது பரவலாகப் பேசப்படும் விஷயம். அமைச்சரவையிலும், சட்டமன்றத்திலும் புதிய முகங்களை, புதிய சிந்தனையை வரும் ஆண்டுகளிலாவது பார்க்க முடியுமா?

கருணாநிதி: என்னைப் பொறுத்த வரையில் சின்சியாரிட்டியோடு இணைந்த சீனியாரிட்டியைத்தான் நான் எப்போதும் மதிப்பவன். கழகம் அவ்வப்போது தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வருவதை அனைவரும் அறிவர். புது முகங்களுக்கும் புதிய சிந்தனைக்கும் கழகத்தில் எப்போதும் வரவேற்பு உண்டு.

கேள்வி: இப்போது 5வது முறையாக முதல்வராக இருக்கிறீர்கள். ஏற்கனவே 4 முறை முதல்வராக இருந்துள்ளீர்கள். இந்த காலத்தில் நீங்கள் நினைத்த எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி விட்டீர்களா? அல்லது இன்னும் நிறைவேற்ற வேண்டியவை இருக்கிறதா?

கருணாநிதி: ஏற்கனவே நான்கு முறை பதவியிலே இருந்த காலத்திலும், தற்போது ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற நிலையிலும், மக்களின் தேவைகளை ஓரளவிற்கு நிறைவேற்றினோம் என்ற மன நிறைவு எனக்குள்ளது என்றபோதிலும், இன்னும் ஏராளமாக மக்களுக்கு செய்திட வேண்டுமென்ற வெறி எனக்குள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. மக்களிடம் தேவை என்று ஒன்று இருக்கின்ற வரையில் அதனைப் பூர்த்தி செய்திட வேண்டுமென்ற எனது விருப்பம் இருந்து கொண்டுதானே இருக்கும்.

கேள்வி: உங்களின் மிக முக்கிய திட்டமாக எதைக் கருதுகிறீர்கள்?

கருணாநிதி: பெரியார் நினைவு சமத்துவப்புரத் திட்டம், அண்ணா மறு மலர்ச்சித் திட்டம்.

கேள்வி: தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

கருணாநிதி: பசியும், பிணியும் தீண்டாத தமிழகம்; இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி முதல் நிலையில் இருக்கும் தமிழகம்; சமத்துவமும், சகோதரத்துவமும் பின்னிப் பிணைந்து இழையோடும் தமிழகம்; தாய்மொழிப் பற்றும், தாயகத்தின் மீது பாசமும் நிறைந்துள்ள தமிழகம். இவைதான் நான் கனவு காணும் தமிழகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+