Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புகார் கொடுத்தவர்கள் மீது வராத கோபம், என்மீது வரலாமா? ஜெ.வுக்கு கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோதிடம், பூஜை எல்லாம் ஜெயலலிதாவுக்குத்தான் கைவந்த கலை. இளம்பிராயம் முதல் இவை எதையும் நம்பாத என்னைப்பற்றி மணவிழா மேடையில் வசைபாடியிருக்கிறார். சிறுதாவூர் சீமாட்டிக்கு இந்த சீற்றம் ஏனோ என்றுதானே கேட்கத்தோன்றுகிறது. சிறுதாவூர் புகார் மனு கொடுத்தவர்கள் மீது வராத கோபம், என்மீது வரலாமா? என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நம்முடைய எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்றையதி னம் அவரது கட்சிக்காரர்கள் இல்லத்தில் சில திருமணங்களை நடத்தி வைத்துவிட்டு பேசும்போது-மணமக்களை வாழ்த்துவதற்கு செலவழித்த நேரத்தைவிட - என்னை வசைபாடுவதற்காக அதிக நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அது மணவிழாவானாலும், ஆர்ப்பாட்டமானாலும், எந்த விழாவானாலும் அவரது பேச்சுக்கு மய்யமாக நான் மட்டும் தான் இருக்கிறேன் போலும்! எத்தனையோ பேர் எனக்கு சாபம் கொடுத்து முடித்துவிட்டார்கள். ஏன் இந்த அம்மையாரே பலமுறை எனக்கு கொடுத்த சாபம் எதுவும் பலிக்கவில்லை.

நான் சின்னஞ்சிறுவனாக திருவாரூரில் எனது உறவினர் கிருஷ்ணன் (முரசொலி சொர்ணத்தின் தந்தையார்) இல்லத்தில் தங்கி படித்துக்கொண்டிருந்த போது-அண்ணன் கிருஷ்ணன் என்னை அணுகி, தம்பி சோதிடம் இல்லை, சாத்திரம் இல்லை என்றெல்லாம் நீ இந்த சிறுவயதிலேயே பிரசாரம் செய்கிறாயே, எனக்கு தெரிந்த சோதிடர் ஒருவர் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் அப்படியே உள்ளதை உள்ளவாறு சொல்கிறார் என்றும், அடுத்தநாள் அவர் வீட்டிற்கு வருவதாக சொல்லியிருக்கிறார் என்றும், அந்த நேரத்தில் நீயும் இருந்து அவர் சொல்வதை கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

நானும் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அன்று மாலையில் ஒரு அம்மையார் என்னை சந்தித்தார். அவர் என்னிடம், "ஏம்பா, நீ தான் இந்த வீட்டுக்காரரின் பிள்ளையா?'' என்று கேட்டார். அவர் யார் என்பதை புரிந்து கொண்டேன். அவரது கேள்விக்கு பதிலாக ஆமாம் என்று கூறினேன். எத்தனை பேர் உடன் பிறந்தவர்கள் என்று அந்த அம்மையார் கேட்க, நானும் தோராயமாக "மூன்று பிள்ளைகள், இரண்டு பெண்கள்'' என்று சொன்னேன்.

இதுபோலவே வேறு சில கேள்விகளையும் என்னைக்கேட்டு, என்னிடம் பதிலை தெரிந்து கொண்டு போய் விட்டார்கள். அடுத்த நாள் காலையில், சோதிடரும், முதல் நாள் என்னை சந்தித்த அந்த அம்மையாரும் கிருஷ்ணன் அண்ணன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

கிருஷ்ண அண்ணன், அவரது துணைவியார், நான் மற்றும் சுற்றிலும் அமர்ந்தோம். சோதிடர் அவருக்கே உரிய சிலவற்றை செய்துவிட்டு - கிருஷ்ண அண்ணனிடம் என்னைக்காட்டி, இவர் தானே உங்கள் மைந்தர் என்றார். கிருஷ்ண அண்ணனிடம் நான் ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததால் அவர் எதிலும் பேசாமல் ஒத்துக்கொள்வதைப்போல அமர்ந்திருந்தார். அடுத்து சோதிடர் உங்களுக்கு எத்தனை ஆண் குழந்தைகள் என்று சொல்லட்டுமா என்று கேட்க-சோதிடருக்கு எதிரே இருந்த சோதிடரின் மனைவி தன் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு-மூன்று விரல்களை நீட்ட-அதைப்பார்த்து கொண்டே - உங்களுக்கு மூன்று பிள்ளைகள் தானே? என்றார். கிருஷ்ண அண்ணன் அதற்கும் எதுவும் பேசவில்லை. அடுத்து எத்தனை பெண் குழந்தைகள் என்று சொல்லட்டுமா என்று கேட்டு தனது மனைவியை பார்க்க அந்த அம்மையார் எதுவும் காட்டிக்கொள்ளாமல் இரண்டு விரல்களை நீட்டிக் காட்டிட, சோதிடர்; உடனே இரண்டு பெண் குழந்தைகள் தானே என்றார். கிருஷ்ண அண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது. அவருக்கு கோபம் வந்தால் வாயில் வார்த்தைகள் இப்படித்தான் வரும் என்றில்லை. சரமாரியாக சோதிடரை திட்டத்தொடங்கி விட்டார்.

சோதிடரின் மனைவி நேற்று இந்த பிள்ளையாண்டான் தான் இந்த விவரங்களையெல்லாம் சொன்னதாக என்னைக்காட்டிவிட-சோதிடர் என்பக்கம் திரும்பி "இந்த சிறுவயதிலேயே இப்படியெல்லாம் செய்கிறாயா? நீ உருப்படவே மாட்டாய்'' என்று பெரிய சாபத்தை கொடுத்துவிட்டு போய் விட்டார். அந்த சாபம் பலித்ததா என்பதற்கு இந்த உலகமே சாட்சி!

அந்த சோதிடர் விட்ட சாபமே பலிக்கவில்லை என்கிற போது-ஜெயலலிதா விடுகின்ற சாபமா பலிக்கப்போகிறது? நான் எழுதிய "சிலப்பதிகார காப்பியம்'' என்ற நாடகத்திலேயே இந்த சோதிடம் பற்றி ஒரு அத்தியாயமே எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்.

அப்படிப்பட்ட நான் ஏதோ சோதிடரின் வார்த்தையை கேட்டு என் வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைக்கப்போவதாக அறிவித்தேனாம். யாரோ சோதிடர் அந்த வீட்டிலே நான் தங்கியிருந்தால் என் உயிருக்கு ஆபத்து என்று சொன்னதால்தான் வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டேனாம்.

அம்மையார் ஜெயலலிதா மணவிழா மேடையிலே முழங்கியிருக்கிறார். எந்தச்சோதிடன் சொன்னான் என்று ஜெயலலிதா நிரூபிக்கத்தயாரா? இன்னும் சொல்கிறேன், என்னுடைய பிறந்த நாளுக்கு பிறகு நான் இப்போதுள்ள வீட்டின் பத்திரத்தைத்தான்; என் மறைவுக்குப்பிறகு அந்த வீட்டை மருத்துவ மனையாக பயன்படுத்த ஒப்படைக்க இருக்கிறேன். இதுஎதுவும் தெரியாமல் ஜெயலலிதா எந்த சோதிடன் சொன்னதையோ கேட்டுக்கொண்டு மணவிழாவிலே சென்று புலம்பியிருக்கிறார்.

அது மாத்திரமல்ல, தலைமைச்செயலக கட்டிட திறப்பு விழாவினைக்கூட சோதிடன் சொன்னதை கேட்டுக் கொண்டு தான் சீக்கிரமாக திறந்து வைத்து விட்டேனாம்! எந்தச்சோதிடன்? சொல்லத் தயாரா?

மார்ச் மாதத்திற்கு மேல் பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே உட்கார்ந்திருந்தால் நீங்கள் திரும்ப ஆட்சிக்கு வரவே முடியாது என்று சோதிடன் சொன்னதை கேட்டுவிட்டுத்தான் தலைமை செயலகத்தை மாற்றியிருக்கிறேனாம். மார்ச் திங்கள் முடிந்து ஏப்ரல் திங்கள் முடிந்து மே திங்கள் நடைபெறுகிறது. புதிய தலைமைச்செயலகத்தின் பணிகள் முற்றுப்பெற இன்னும் மூன்று நான்கு மாதங்களாக போகிறது. அதுவரை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தான் உட்கார்ந்திருக்க போகிறேன். இப்போது ஜெயலலிதாவின் புளுகு என்னவாகப் போகிறது?

ஏன், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது புதிய தலைமைச்செயலகம் ஒன்றை கோட்டூர்புரத்தில் கட்டுவதாக சொல்லி சோதிடர்களையெல்லாம் அழைத்து வந்து பூஜை புனருத்தாரணங்கள் எல்லாம் செய்து அடிக்கல் நாட்டியதாக ஏடுகள் எல்லாம் பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டதே, என்னவாயிற்று? அந்தச்சோதிடம் பலித்ததா?

அது மாத்திரமல்ல, கடற்கரை சாலையிலே பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்-அமைச்சராக இருந்த போது வைக்கப்பட்ட கண்ணகி சிலையை அன்றாடம் பார்த்துக்கொண்டே தலைமைச்செயலகம் சென்றால், ஆட்சி நீடிக்காது என்று யாரோ சோதிடன் சொன்ன சொல்லை கேட்டுக்கொண்டு இரவோடு இரவாக லாரியை விட்டு இடிக்கச்சொல்லி, அந்தச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி அருங்காட்சியகத்தில் கொண்டுபோய் ஒரு மூலையில் போட்டு வைத்தார்களே, அந்தச் சோதிடன் சொன்னது பலித்து அவருடைய ஆட்சி நீடித்ததா? அந்த கண்ணகி சிலையை அதே இடத்தில் வைத்து அன்றாடம் நான் பார்த்துக்கொண்டு தானே தலைமைச்செயலகம் செல்கிறேன், என்னுடைய ஆட்சிக்குத் தான் இடைஞ்சல் வந்து விட்டதா?

ஏன், இன்றைக்கு (நேற்று) வந்துள்ள ஏடுகளில் ஜெயலலிதா ராகு-கேது-பூஜா செய்ய காளகஸ்தி போவதாகவும், அதற்காக 300 காவலர்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும் செய்தி வந்திருக்கின்றது. இந்த சோதிடம், யாகம், பூஜை, புனருத்தாரணம் எல்லாம் அவருக்கே கைவந்த கலையே தவிர, இளம் பிராயம் முதல் இதில் எதையும் நம்பாத என்னைப்பற்றி மணவிழா மேடையிலே ஏறிக்கொண்டு சோதிடர் பேச்சை கேட்டுக்கொண்டுதான் வீட்டை தானம் செய்கிறேன். தலைமைச்செயலகத்தை மாற்றினேன் என்றெல்லாம் வசைபாடியிருக்கிறார் என்றால், சிறுதாவூர் சீமாட்டிக்கு இந்த சீற்றம் ஏனோ என்று தானே கேட்க தோன்றுகின்றது! சிறுதாவூர் பற்றி புகார் மனு கொடுத்தவர்கள் மீது வராத கோபம்; என்மீது வரலாமா? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+