வெங்காய மூடைகளுக்குள் வைத்து கடத்தப்பட்ட ரூ. 20 லட்சம் எரிசாராயம் பறிமுதல்
புளியரை: வெங்காய மூடைகளுக்குள் பதுக்கிக் கடத்த முயன்ற 200 கேன் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழக-கேரள எல்லையான புளியரை செக்போஸ்ட் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான லாரிகள் கேரளாவுக்கு சென்று வருகின்றன. இவ்வாறு செல்லும் வாகனங்களில் அடிக்கடி ரேசன் அரிசி போன்ற பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த வண்ணம் இருந்து வருகிறது. இதனால் புளியரை செக்போஸ்ட்டில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு புளியரை செக்போஸ்ட் வழியாக கேரளாவிற்கு வெங்காயம் ஏற்றிக் கொண்டு சென்ற லாரியை போலீசார் சோதனை போட்டனர். அப்போது ஈரோட்டில் இருந்து வந்த லாரியில் வெங்காயத்திற்கு நடுவே ஏரளாமான எரிசாராய கேன்கள் இருப்பதை கண்ட போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதில் தலா 35 லிட்டர் கொண்ட 200 கேன்கள் இருந்தது.
இதையடுத்து லாரி டிரைவர் அஷ்ரப்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த எரிசாராயம் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் தெரிய வில்லை. பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications