மங்களூர் விபத்துக்குப் பொறுப்பேற்று விலக பிரபுல் விருப்பம் - பிரதமர் மறுப்பு
டெல்லி: மங்களூரில் நடந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்துக்குப் பொறுப்பேற்று பதவி விலக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் முன்வந்தார். ஆனால் அதை ஏற்க பிரதமர் மன்மோகன் சிங் மறுத்து விட்டார்.
மங்களூரில் நேற்று காலை நடந்த கோரமான விமானவிபத்தைத் தொடர்ந்து பிரபுல் படேல் அங்கு விரைந்து வந்தார். விபத்து குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் டெல்லி திரும்பிய அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
அப்போது விமான விபத்து குறித்து விளக்கிய பிரபுல், இதற்குக் தார்மீகப் பொறுப்பேற்று தான் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அதை ஏற்க பிரதமர் மறுத்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
பிரதமரை சந்தித்தபோது, கடந்த ஆறு ஆண்டுகளாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு தான் எப்படியெல்லாம் பாடுபட்டேன் என்பதை விளக்கிய பிரபுல் படேல், தற்போதைய விபத்து குறித்து வேதனையும், ஆதங்கமும் வெளியிட்டு அதற்கு தார்மீகப் பொறுப்பேற்பதாகவும தெரிவித்தாராம்.
அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர், வெளியே வந்த படேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனிப்பட்ட முறையில் இந்த பெரும் துயரமான சம்பவத்திற்கு தான் தார்மீகப் பொறுப்பேற்பதாக தெரிவித்தார்.
பிரதமர் உங்களிடம் என்ன கூறினார் என்ற கேள்விக்கு, சூழ்நிலைக்குப் பலியாகி விடாமல் அதை எதிர்கொள்ளுமாறு கூறினார். சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டை மீறிப் போய் விடுகின்றன. திருத்தப்படக் கூடிய தவறுகள் இருந்தால் அதை திருத்த முயற்சிக்க வேண்டும் என்றும் கூறினார் என்றார் படேல்.
ராஜினாமா செய்ய முன்வந்தீர்களா என்ற கேள்விக்கு, பிரதமருடன் விவாதித்த அனைத்து விஷயங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றார் படேல்.












Click it and Unblock the Notifications