அதிமுகவுடன் தேமுதிக கூட்டணியா?-பண்ருட்டி மறுப்பு
திருச்சி: அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி என்று பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்திகள் தவறானது, எங்கள் ஓட்டு வங்கி வளர்ந்துள்ளது என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், திமுக அரசிடம் இலவசத் திட்டஙகளைத் தவிர வேறு எந்த உருப்படியான திட்டங்களும் இல்லை. ஆட்சி மாற்றம் மட்டுமே மக்களின் கஷ்டங்களுக்கு முடிவைத் தரும்.
ஊழலையும், வறுமையையும் ஒழிப்போம் என்று தேமுதிக சொல்வதை மக்கள் ஏற்று கொண்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் கூட்டணி வைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை ஏற்க முடியாது. எந்தக் கூட்டணிக்கும் மக்கள் ஆதரவு முக்கியம். மக்களின் சம்மதத்தை ஏற்கக்கூடிய கூட்டணியை அமைக்க வேண்டும்.
கூட்டணி குறித்து பொதுக் குழுவில் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து தீர்மானிக்கப்படும். அரசியலைப் பொறுத்தவரை தேர்தலுக்கு முன் ஒரு வாரத்துக்குள் எப்படி வேண்டுமானாலும் நிலைமை மாறலாம்.
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி என்று பத்திரிக்கைகளில் வந்துள்ள செய்திகள் தவறு. எங்கள் ஓட்டு வங்கி வளர்ந்துள்ளது. தேமுதிகவைப் பொறுத்த வரை தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே நோக்கமல்ல.
தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே லட்சியம், அதற்கு கொஞ்சம் காலமாகலாம், ஆனால், காத்திருப்பதில் தவறில்லை என்றார்.












Click it and Unblock the Notifications