Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவுக்கு ஏதாவது தகுதி உண்டா?-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏகப்பட்ட ஊழல் வழக்குகளில் சிக்கி தேர்தலில் போட்டியிடக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ஜெயலலிதாவுக்கு, முதல்வர் பதவியையே ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலைக்கு ஆளான ஜெயலலிதாவுக்கு, மற்றவர்கள் மீது குறை கூறி ஆர்ப்பாட்டம் நடத்த ஏதாவது தகுதி உண்டா? என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா மீது குற்றச்சாட்டு இருப்பதாகக் கூறி, அவர் தார்மீகப் பொறுப்பேற்று மந்திரி பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று கேட்டு ஜெயலலிதா சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.

ஆனால், இந்த அம்மையார் மீது கடந்த காலத்தில் ஊழல் புகார்கள் கூறப்பட்டு, நீதிமன்றத்திலும் நீதியரசர்களால் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, இவர் தார்மீகப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தாரா?.

தான் பன்னிரண்டு வழக்குகளில் விடுவிக்கப் பெற்றேன் என்று அறிக்கையிலே அவர் சொல்லிக் கொண்டபோதிலும், எப்படி அந்த விடுதலை கிடைத்தது, அதே வழக்குகளில் நீதியரசர்கள் அதற்கு முன்பு என்ன தீர்ப்பளித்தார்கள் என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

2001ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜெயலலிதா ஒரு தொகுதியிலே கூட போட்டியிடவில்லை. தேர்தலுக்கான மனுத் தாக்கல் ஏப்ரல் 16ம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே கிருஷ்ணகிரி தொகுதியில் தேர்தல் அதிகாரி எம்.மதிவாணனிடம் தனது வேட்பு மனுவை ஜெயலலிதா தாக்கல் செய்தார்.

ஏப்ரல் 18ம் தேதி ஆண்டிபட்டி தொகுதியில் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஜெயாவிடம் தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான ஏப்ரல் 23ம் தேதி ஜெயலலிதா சார்பில் புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வேட்பு மனுக்களின் பரிசீலனை 24ம் தேதி நடந்தது. கிருஷ்ணகிரி தொகுதி தேர்தல் அதிகாரி மதிவாணன் வேட்பு மனுவைப் பரிசீலித்துவிட்டு, ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாலும், அவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாலும் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.

டான்சி நில பேர வழக்கில் ஜெயலலிதாவுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு இரண்டாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8வது பிரிவு கூறுகிறது.

(மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 (3)ன்படி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல் தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார். இந்தத் தகுதி இழப்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது தேர்தல் ஆணையத்தின் சட்டம்)

இந்தச் சுற்றறிக்கையை 1997ல் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வரும், பிரபல வழக்கறிஞருமான சித்தார்த்த சங்கர் ராய், ஜெயலலிதாவுக்காக ஆஜராகி, அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை உயர்நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அவரது மனுவை ஏற்க வேண்டுமென்று வாதாடினார்.

ஆனால், தேர்தல் அதிகாரி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் 1997ம் வருடத்திய சுற்றறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஜெயலலிதாவின் வேட்பு மனுவை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தார்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த 14ம் தேதியன்றே அவசர அவசரமாக அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டம் கூட்டப்பெற்றது. ஜெயலலிதா சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உடனடியாக 14ம் தேதி மாலையிலேயே அவருக்கு கவர்னர் பாத்திமா பீவி பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்கத் தடை கோரி யாராவது வழக்கு தொடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் அவசர அவசரமாகப் பதவியேற்றதாக அப்போது ஏடுகள் எல்லாம் கூறின.

கவர்னர் பாத்திமா பீவி இவ்வாறு அவசர அவசரமாக பதவியேற்பு செய்து வைத்ததையொட்டி கவர்னர் மீது வழக்கு தொடரப்படும் என்று ஒரு கருத்து கூறப்பட்டபோது, ஜெயலலிதா கவர்னரின் செயல்களை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர முடியாது, கவர்னர் முடிவை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று கூறினார்.

ஆனால், 1995ம் ஆண்டு டான்சி ஊழல் தொடர்பான வழக்கில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதியளித்தபோது, கவர்னருக்கு எதிராக ஜெயலலிதா உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமல்ல, கவர்னர் சென்னா ரெட்டி அவர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய அரசை பேரவை கோருகிறது என்ற தீர்மானத்தையும் பேரவையிலே நிறைவேற்றினார்.

ஜெயலலிதாவை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்ததில் என்ன தவறு என்று சிலர் கேட்கக் கூடும். அவர் ஒரு கிரிமினல் குற்றவாளி என்ற அடிப்படையில் அவர் தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லையென்று அவருடைய வேட்பு மனு, அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டது.

அவ்வாறு தேர்தலில் போட்டியிட தகுதியிழந்த ஒருவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கலாமா? ஜெயலலிதா மீது பல ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது உண்டு. அவர் மீதான மூன்று ஊழல் வழக்குகளை சென்னை தனிக் கோர்ட்டு விசாரித்து தீர்ப்பு கூறியது.

அவர் ஊழல் செய்தது நிரூபிக்கப்பட்டு அவருக்கு சிறை தண்டனை விதித்தே தீர்ப்பு கூறப்பட்டது. ஒரு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டாவது வழக்கில் அதாவது டான்சி நில ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மூன்றாவது ஊழல் வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகளை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

சென்னை உயர் நீதிமன்றம் சிறை தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்ததே தவிர தீர்ப்புக்கு தடை விதிக்கவில்லை. இவை தவிர மேலும் சில வழக்குகள் நிலுவையிலே இருந்தன. ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பி.ஆர்.கபூர், தனஞ்செயன் சவுஹான், பிரதாப் சிங் சவுதாலா, பி.எல்.வதேரா ஆகியோர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அதன்மீது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் அமைப்புச் சட்ட பெஞ்ச் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

ஊழல் வழக்கில் தண்டனை அடைந்த ஒருவர் மேல் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரை, அரசுப் பதவியில் நீடிக்கக் கூடாது, குற்றவாளி என்று கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேல் நீதிமன்றம் நிறுத்தி வைக்கக் கூடாது, தண்டனையை வேண்டுமானால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம், ஆனால் ஊழல் குற்றவாளி ஒருவர் குற்றச் சாட்டுகளில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் வரை அரசு பதவியில் நீடிக்கக் கூடாது.

அப்படி அமர்வதற்கு நீதிமன்றம் துணை போகக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.டி. தாமஸ், எஸ்.என்.வரியவா ஆகியோர் 2-8-2001 அன்று பரபரப்பான ஒரு தீர்ப்பை ஊழல் வழக்கு ஒன்றிலே தெரிவித்தனர்.

இந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டி ஊழல் குற்றவாளி ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியில் நீடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி பி.ஆர்.கபூர் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். இந்த வழக்கைத் தொடர்ந்து பல வழக்கறிஞர்கள் ஜெயலலிதா முதல்வராக பதவியிலே தொடருவது பற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

எம்.எல்.ஏவாக இல்லாத ஜெயலலிதா முதல்வர் பொறுப்பேற்றிருந்தார். அவர் ஆறு மாத காலத்திற்குள் எம்.எல்.ஏவாக ஏதாவதொரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும். ஆனால் டான்சி நில ஊழல் அப்பீல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்த நிலையில் அவர் எந்தவொரு தொகுதியிலும் வேட்பாளராக போட்டியிட இயலாது. எனவே 2001ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி அவர் முதல்வர் பதவியை விட்டு விலகிட வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்.

அவருக்குப் பதிலாக அந்தக் கட்சியைச் சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார். இப்படிப்பட்ட ஜெயலலிதாவுக்கு மற்றவர்கள் மீது குறை கூறி ஆர்ப்பாட்டம் நடத்த தகுதி உண்டா என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் யோசிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+