அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்?
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஈரோடு ராமலிங்கம் மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு தரப்படலாம் என்று தெரிகிறது.
ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் இடதுசாரிகள், மதிமுக ஆதரவுடன் 2 பேர் போட்டியிடவுள்ளனர்.
இந்த இரு வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து அதிமுக செயற் குழுவில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
அதிமுக இளைஞர்-இளம் பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளரும் சசிகலாவின் உறவினருமான டாக்டர் வெங்கடேஷ், சசிகலாவின் அக்காள் மகனான முன்னாள் எம்பி டி.டி.வி. தினகரன்,
முன்னாள் அமைச்சர்கள் நயினார் நாகேந்திரன், தளவாய் சுந்தரம், வளர்மதி, முன்னாள் எம்பிக்கள் திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா, முன்னாள் எம்எல்ஏக்கள் ஆதிராஜாராம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி திமுகவில் சேர முடிவெடுத்துள்ளதால், ஈரோடு பகுதியில் அதிமுகவின் செல்வாக்கை நிலைநிறுத்த அப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சீட் தரவும் அதிமுக தலைமை சிந்தித்து வருவதாகத் தெரிகிறது.
ஈரோடு மாநகர் மாவட்ட மாவட்டச் செயலாளர் ராமலிங்கத்துக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலாம் என கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.
இன்னொரு இடம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தரப்படலாம் என்று கருதப்படுகிறது. (திமுக தனது 3 இடங்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்த தங்கவேலை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது)
ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது. அதில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவர் என்று தெரிகிறது.
இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் ஜெ.வுடன் சந்திப்பு:
இந் நிலையில் ஜெயலலிதாவை நேற்று இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் பேராசிரியர் முஹம்மத் சுலைமான், தமிழ் மாநிலத் தலைவர் எஸ்.ஜே.இனாயத்துல்லா, பொதுச் செயலாளர் ஜகிருதீன் அகமத், துணைத் தலைவர்கள் நாகூர் ராஜா, பஷீர் அகமத், செயலாளர் ஷெரீப், அமைப்புச் செயலாளர் எஸ்.எம்.ஹூஉசைன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
போயஸ் தோட்ட இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது.
காயிதேமில்லத் நினைவிடத்தில் ஜெயலலிதா:
இந் நிலையில் அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கண்ணியத்துரிய காயிதே மில்லத் அவர்களின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு 5ம் தேதி காலை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர்ப்போர்வை போர்த்தி மரியாதை செலுத்த உள்ளார்.
இதில் தலைமைக் கழக நிர்வாகிகளும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அனைத்து பிரிவுகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுவின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பிறந்தநாள் நிகழ்ச்சியை சிறப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், திருச்சி மாநகராட்சி அப்பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி, தெருவிளக்கு வசதி ஆகியவற்றை நிறைவேற்ற அக்கறை செலுத்தாத மாநகராட்சி நிர்வாகம், சொத்துவரி, குடிநீர் வரி போன்ற வரிகளை உயர்த்தி, மக்கள் மீது கூடுதல் நிதிச் சுமையை திணித்துள்ளது.
காவிரி ஆற்றுக்கு அருகில் திருச்சி மாநகர் இருந்தாலும், அப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காத அவல நிலை நிலவுவதாகவும்; பல இடங்களில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் பலவிதமான நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாக்கப்படுவதாகவும்; தெருவிளக்கு பராமரிப்பின்மை மற்றும் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான சாலைகள் இருண்டு கிடப்பதாகவும், இதன் விளைவாக, வழிப்பறி, கொள்ளை போன்ற சட்ட விரோதச் செயல்கள் அன்றாடம் கொடிகட்டி பறப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக, 28.4.2010 அன்று மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, சாலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி குறித்து திமுக பகுதிச் செயலாளருக்கும் மற்றொரு ஒப்பந்ததாரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் மாநகராட்சியே போர்க்களம் போல் காட்சி அளித்தது முடங்கியுள்ளது.
திருச்சி மாநகர், மணிகண்டம் ஒன்றியக் குழுவின் தலைவரான திமுகவைச் சேர்ந்த செங்குட்டுவன் என்பவருக்கும், துணைத் தலைவரான காங்கிரசை சேர்ந்த சுந்தரம் என்பவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டையின் காரணமாக கடந்த 6 மாதங்களாக மணிகண்டம் ஒன்றியக் குழுவே செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது.
ஒன்றியக் குழுவின் அனுமதி இல்லாமலேயே 2 கோடி ரூபாய்க்கு மேல் பணிகள் ஒதுக்கப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக ஒன்றியக்குழு உறுப்பினரே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
தங்களுடைய அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் ஆகிய செயல்களில் ஈடுபட்டும், அதைத் தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக செய்துதர வலியுறுத்தியும், மணிகண்டம் ஒன்றியக் குழுவை உடனடியாக கலைத்திட வலியுறுத்தியும் திருச்சி மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் வரும் 3ம் தேதி திருச்சி ஜங்ஷன், காதி கிராப்ட் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. தலைமையிலும், திருச்சி மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் மனோகரன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications