திருச்சியில் கவுன்சிலர்கள் கடும் சண்டை- செயின் அறுந்தது- மண்டை பிளந்தது
திருச்சி: திருச்சியில், மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் திமுக, தேமுதிக, மதிமுக கவுன்சிலர்களுக்கிடையே கடும் சண்டை மூண்டது. ஒருவரை ஒருவர் தாறுமாறாக தாக்கிக் கொண்டதில் ஒரு கவுன்சிலரின் மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. ஒருவருடைய தங்கச் சங்கிலி அறுந்து போனது.
திருச்சி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் இன்று காலை தலைவர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும் தி.மு.க. கவுன்சிலர் சிங்காரம் எழுந்து கடந்த கூட்டத்தில் நடந்த மோதல் பற்றி போஸ்டர் அடித்து ஓட்டியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு தலைவர் சங்கீதா இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
இந்த நிலையில், ம.தி.மு.க. கவுன்சிலர் சேரனுக்கும், சிங்காரவேலுவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடுமையாக வாதிட்டனர். அந்தசமயத்தில், தே.மு.தி.க. கவுன்சிலர் கனகராஜுடனும் சிங்கார வேலு வாக்கு வாதம் செய்தார்.
இதனால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது. அந்த சமயத்தில் வாக்குவாதம் கடும் கை கலப்பாக மாறியது. சிங்காரவேலு, சேரன், கனகராஜ் ஆகியோர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். நாற்காலிகள் வீசப்பட்டன.
இந்த சண்டையில், கனகராஜுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிங்காரவேலுவின் தங்க செயின் அறுந்து விழுந்தது.
இப்படி இந்த மூவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது சபியுல்லா என்ற இன்னொரு கவுன்சிலரும் கையில் ஒரு நாற்காலியை எடுத்துக் கொண்டு ஓடி வந்ததால் பெரும் பரபரப்பானது.
கடுமையாக சண்டை போட்ட திமுக, தேமுதிக, மதிமுக கவுன்சிலர்களை அதிமுக கவுன்சிலர்கள் கடும் பாடுபட்டு விலக்கி விட்டனர்.












Click it and Unblock the Notifications