12 சர்க்கரை ஆலைகளில் அமையும் ரூ. 1125 கோடி மின் உற்பத்தி நிலையங்கள் - அடிக்கல் நாட்டினார் கருணாநிதி

தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில், கரும்புச் சக்கையில் இருந்து மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு முடிவு எடுத்தது.
அதன்படி, 12 சர்க்கரை ஆலைகளில் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
சென்னை கோட்டையில் உள்ள முதலமைச்சர் அறையிலிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இத்திட்டங்களுக்கு முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.
அதற்கு முன்பாக சேலம் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொடங்கப்படும் திட்டம் குறித்து நாமக்கல் ஆட்சித் தலைவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். இதேபோல மதுரையிலிருந்து கலெக்டர் காமராஜ், விழுப்புரத்திலிருந்து அமைச்சர் பொன்முடி, தஞ்சையிலிருந்து மத்திய இணையமைச்சர் பழனிமாணிக்கம் ஆகியோர் பேசினர்.
பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் மூலம் மின்சாரம் தயாரித்திடும் இணை மின் திட்டங்களை உருவாக்கிட இந்த அரசு ஊக்கமளித்து வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளின் நலன் கருதியும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் தொடர்ந்து முழு அரைவைத் திறனுடன் இயங்கிட ஏதுவாகவும் கரும்பு விவசாயிகளுக்குக் கரும்பு கொள்முதல் விலையாக இந்த ஆண்டில் டன் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் நிதிநிலையை மேம்படுத்திட கரும்பின் துணைப் பொருள்களில் ஒன்றாகிய கரும்புச் சக்கையில் இருந்து மின்சாரம் தயாரித்திட அரசு முடிவெடுத்தது.
அதன் அடிப்படையில் தற்போது 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் 849 கோடியே 36 லட்ச ரூபாய் செலவில் இணை மின் உற்பத்தி செய்யும் திட்டம்; 276 கோடியே 27 லட்ச ரூபாய் செலவில் கரும்பு ஆலைகளில் உள்ள எந்திரங்களை நவீனமயமாக்கிடும் திட்டம் என மொத்தம் 1,125 கோடியே 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் இந்நிகழ்ச்சிகள் வாயிலாக தொடங்கி வைக்கப்படுகின்றன.
இத்திட்டங்கள் அனைத்தும் இந்த 12 கரும்பு ஆலைகளையும் சேர்த்த விவசாயப் பெருங்குடி மக்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. 18 மாதங்களில் நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டங்களின் வாயிலாக சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கிடைக்கும்.
இத்திட்டத்தின் மூலம், சர்க்கரை ஆலைகளும் ஏறத்தாழ ஒரு லட்சம் கரும்பு விவசாயிகளும், மின்சாரத்தை நுகர்வோரும் மிகுந்த பயனடைவார்கள். ஏறத்தாழ 1200 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்த திட்டத்தின் பலனாக தயாரிக்கப்படும் 183 மெகாவாட் மின்சாரத்தில், சர்க்கரை ஆலைகளுக்கு தேவையான 63 மெகாவாட் மின்சாரம் போக மீதம் உள்ள 120 மெகாவாட் மின்சாரம் நாம் பயன்படுத்திக்கொள்கிற வகையிலே உதவும்.
தமிழகத்தின் மின் பற்றாக்குறையை போக்குவதில் பங்கெடுத்துக் கொள்ளும் சர்க்கரை ஆலை நிறுவனங்களையும், இத்திட்டத்துக்கு உறுதுணையாக விளங்கும் அமைச்சர் பெருமக்களையும் அதிகாரிகளையும் உளமார பாராட்டுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications