பாலியல் வழக்கில் கல்பாக்கம் அணு மைய விஞ்ஞானி கைது-அடையாளத்தை மறைத்ததால் போலீஸ் தேடியது

கேரளத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (37), கடந்த 12 ஆண்டுகளாக கல்பாக்கத்தில் அணு ஆராய்ச்சி மையத்தில் எலெக்ட்ரிகல் பிரிவில் செயற் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
கல்பாக்கம் அருகே உள்ள அணுபுரம் ஊழியர் குடியிருப்பில் சரஸ்வதி அபார்ட்மெண்டில் வசித்து வந்தார். இவரது மனைவி ஸ்ரீஜா (30), கேரள மாநிலம் கண்ணூரில் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை.
ராதாகிருஷ்ணன் கல்பாக்கத்திலும், அவரது மனைவி கேரளாவிலும் வேலை செய்து வருவதால் தினமும் காலை, மாலை வேளைகளில் தொலைபேசியில் இருவரும் பேசிக்கொள்வது வழக்கம்.
பள்ளி விடுமுறை தினங்களில் ஸ்ரீஜா, கணவருடன் அணுபுரம் வீட்டில் வசிப்பார். கடந்த ஒரு மாதமாக கணவருடன் தங்கியிருந்த ஸ்ரீஜா, பள்ளி விடுமுறை முடிந்ததால் கடந்த 1ம் தேதி தான் கேரளா திரும்பினார்.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு சென்று திரும்பிய ராதாகிருஷ்ணன் இரவு 8.30 மணியளவில் மனைவியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது டிபன் சாப்பிட வெளியே போகிறேன் என கூறியுள்ளார்.
அப்போது வெளியே போனவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அடுத்து சனி, ஞாயிறு விடுமுறையானதால் அலுவலகத்துக்கும் வரவில்லை. அதே நேரத்தில் அவரது மனைவியும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து ஸ்ரீஜா கல்பாக்கத்துக்கு விரைந்து வந்தார். வீடு பூட்டப்பட்டிருந்தால் அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை கல்பாக்கத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெங்கம்பாக்கம் பகுதியில் ராதாகிருஷ்ணனின் பைக் சிக்கியது.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஒரு பெண் கொடுத்த பாலியல் பலாத்கார புகாரின் கீழ் அவர் பல்லாவரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது தனது பெயர் விவரத்தையும், வீட்டு முகவரியையும் மாற்றிக் கொடுத்துள்ளார் என்ற விபரமும் தெரியவந்துள்ளது.
புழல் சிறையில் இருப்பது அவர்தானா என்பதை உறுதி செய்ய அவரது உறவினர்களை போலீசார் அழைத்துச் சென்றனர். அவர்கள் அவர் ராதாகிருஷ்ணன் தான் என்பதை உறுதி்ப்படுத்தியுள்ளனர்.
சில தினங்களுக்கு வீட்டு வேலைக்கு பெண்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வரும் சத்தார் என்பவரின் மனைவி ஷாநவாஸ் தந்த பத்திரிக்கை விளம்பரத்தை ராதாகிருஷ்ணன் பார்த்துள்ளார்.
இதையடுத்து அதில் தரப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது வீட்டுக்கு பணிப் பெண் தேவையா என்று ஷாநவாஸ் கேட்க, அவரிடம் குரலில் மயங்கிய ராதாகிருஷ்ணன், எனக்கு வீட்டு வேலைக்கு பெண்கள் வேண்டாம். நீ தான் வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஷாநவாஸ் அவரை எச்சரித்து தொடர்பை துண்டித்துள்ளார். ஆனாலும் ராதாகிருஷ்ணன் விடாமல் தினமும் செல்போனில் ஆபாசமாக பேசியதோடு, ஆபாச எஸ்.எம்.எஸ்கும் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார்.
ராதாகிருஷ்ணனின் செக்ஸ் தொல்லை எல்லை கடந்ததால் ஷாநவாஸ் பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஷாநவாஸ் மூலமாகவே ராதாகிருஷ்ணனுடன் நைசாகப் பேசி, அவரை பல்லாவரம் ரயில் நிலையம் அருகே கடந்த 6ம் தேதி வரவழைத்தனர் போலீசார்.
கிழக்கு கடற்கரை சாலையில் வெங்கம்பாக்கம் சந்திப்பு அருகே ஒரு கடை முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு பஸ்சில் ஏறி பல்லாவரம் ரயில் நிலையம் அருகே வந்தார் ராதாகிருஷ்ணன்.
அங்கு வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரித்த போது அவர் தன் பெயர் ஷியாம் சுந்தர் என்றும், பெங்களூர் சாஸ்திரி நகரில் வசிக்கும் கோவிந்தன் என்பவரது மகன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் சென்னையில் எச்.ஏ.எல். நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பி போலீசாரும் குறிப்பு எழுதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
அவர் கைது செய்யப்பட்ட விவரத்தை தந்தி மூலம் அந்த முகவரிக்கு தெரிவித்துள்ளனர். அந்த தந்தி போய் சேர்ந்ததா இல்லையா என்பதை கண்டுகொள்ளவில்லை.
ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட விவரம் அவரது உறவினர்களுக்கோ உடன் பணியாற்றுவோருக்கோ தெரியாது. இந் நிலையில் தான் இன்று ராதாகிருஷ்ணனின் படம் 'விஞ்ஞானியை காணவில்லை' என்ற செய்தியுடன் வெளியானது.
இதைப் பார்த்த பல்லாவரம் போலீசார் அதிர்ந்துபோய், ராதாகிருஷ்ணனின் உறவினர்களை வரவழைத்துள்ளனர். ராதாகிருஷ்ணனின் மனைவி ஸ்ரீஜாவின் சகோதரர் பத்மராஜை அழைத்து கொண்டு புழல் சிறைக்கு சென்றுள்ளனர்.
அப்போது தான் அது ராதாகிருஷ்ணன் என்பது உறுதியானது. இதனால் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இந் நிலையில் பொய் முகவரி தந்ததாக ராதாகிருஷ்ணன் மீது போலீசார் இன்னொரு வழக்கையும் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் மீது துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்க அணு ஆராய்ச்சி நிலையம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications