தமிழை கோர்ட்மொழியாக அரசு தயார்-வீரப்ப மொய்லி
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர மத்திய அரசு ஆதரவாகவே உள்ளது. ஆனால் இதில் இறுதி முடிவை, நீதித் துறை தான் முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனமான துளிர் அமைப்பு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்த சட்ட மசோதா தொடர்பான கருத்தரங்கிற்கு சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் ஈடுபடுபவர்களை தண்டித்தால் மட்டும் அவர்களுக்கு எதிரான கொடுமைகள் குறைந்து விடாது.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளே நடக்காத வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும். அதற்காக இந்த கருத்தரங்கில் முன்வைக்கப்படும் சில கருத்துக்களை பரிசீலிக்க தயாராக உள்ளோம்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கும் சட்டம் 2வது முறையாக திருத்தப்பட்டுள்ளது. இது அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிறகு வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைத்து சட்டமாக நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வருவதைப் பற்றி நீதித்துறை தான் முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் உள்ளது. அவ்வாறு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர நீதித்துறை முடிவெடுத்தால் மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும்.
அன்மையில் அதிகரித்து வரும் கவுரவ கொலையைத் தடுக்க கடுமையான சட்ட திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த சட்ட மசோதாவும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைத்து சட்டமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications