பெட்ரோல், கேஸ் விலை உயர்வு வாபஸ் ஆகாது-பிரணாப் திட்டவட்டம்

பெட்ரோல் விலையை ரூ.3.50ம், டீசல் விலையை ரூ.2ம், மண்ணெண்ணெய் விலையை ரூ. 3ம், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.35ம் உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விலை உயர்வை வாபஸ் பெறக் கோரியும் இன்று தேசிய அளவில் பந்த் நடக்கிறது.
இந் நிலையில் கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.
பந்த் நியாயமில்லை-முரளி தியோரா:
இந் நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள போராட்ட அழைப்பில் எவ்வித நியாயமும் இல்லை.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் சிறிதளவே பாதிக்கப்படுவர்.
மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் இனிமேல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தினசரி கூடுதலாக 50 பைசா மட்டுமே செலவாகும்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.35 உயர்த்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இனிமேல் தினசரி ரூ.1 மட்டுமே கூடுதலாக செலவாகும்.
இதைத் தவிர சாமானிய மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படமாட்டார்கள். ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதை எதிர்க்கட்சிகள்தான் ஊதிப் பெரிதாக்குகின்றன.
இந்தப் போராட்டத்தை அரசுக்கு மட்டுமல்லாது சாமானிய மக்களுக்கும் எதிரான போராட்டம் என்றே சொல்ல வேண்டும். இப்போராட்டத்தால் அன்றாடம் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தும் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.
1998ம் ஆண்டு ரேசன் மூலம் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை ரூ.2.52ல் இருந்து ரூ.9 ஆக அப்போதைய பாஜக கூட்டணி அரசு உயர்த்தியது. அப்போது கச்சா எண்ணெய் விலை 147 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. ஆனால், அப்போதைய பாஜக அரசு மண்ணெண்ணெய் விலையை 258 சதவீதம் உயர்த்தியது.
எனவே, இவர்களது போராட்டத்தில் எந்த நியாயமும் இல்லை என்றார் தியோரா.












Click it and Unblock the Notifications