சென்னையில் தொடரும் வேட்டை-104 வயது தந்தையை புறக்கணித்த 54 வயது மகன் கைது
சென்னை: பெற்றோர்களைக் கைவிடும், புறக்கணிக்கும், ஒதுக்கித் தள்ளும் பிள்ளைகளை பிடிக்கும் வேட்டையை போலீஸார் தொடர்ந்து முடுக்கி விட்டுள்ளனர். இதில் லேட்டஸ்டாக 104 வயது தந்தையைக் கைவிட்ட 54 வயது மகன் சிக்கியுள்ளார்.
பெற்றோர்களை கைவிடும் குழந்தைகள் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் வந்ததைத் தொடர்நது பிள்ளைகளால் கைவிடப்படும் வயதானோர் போலீஸில் புகார் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
சமீபகாலமாக சென்னையில் பலரும் இது போல சிக்கி கைதாகியுள்ளனர். இந்தநிலையில் 104 வயதான தந்தையை கைவிட்ட 54 வயது பிள்ளையை போலீஸார் பிடித்துள்ளனர்.
புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். 104 வயது நிரம்பிய இந்தப் பெரியவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் முதியோர்கள் உதவி மையத்திற்கு போன் மூலம் ஒரு புகாரை தெரிவித்தார்.
அதில், தனது மகன் தங்கராஜ் தன்னைக் கவனிக்காமல் புறக்கணித்து வருவதாகவும், சாப்பிடக் கூட வழியில்லாமல் தவித்து வருவதாகவும் அழுதபடி கூறினார்.
இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கஉத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து சென்று கன்னியப்பனிடம் நடந்தது குறித்து விசாரித்தனர்.
அதன் பின்னர் 54 வயதான தங்கராஜை போலீஸார் கைது செய்தனர். அவர் பிஸ்கட் நிறுவனத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதால்தான் தன்னால் தனது தந்தையைக் கவனிக்க முடியாமல் போனதாகவும், இனிமேல் முறையாக கவனிப்பதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.
சட்டப்படி அவரை கைது செய்வதாக போலீஸார் தெரிவித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications