விஜயகாந்துடன் கூட்டணி சேர கண் அசைத்து காதல் மொழி பேசுகிறார்கள்-பண்ருட்டி ராமச்சந்திரன்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்து தேமுதிக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதற்கு தலைமை தாங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்,
தமிழக மீனவர்கள் பிரச்சனை இன்று தமிழக அரசியலை உலுக்கிக் கொண்டிருக்கிறது. விஜயகாந்த் தமிழக மீனவர்களுக்காக ராமேஸ்வரம் சென்று மீனவர்களுடன் சேர்ந்து போராடினார். கடந்த ஆண்டு டெல்லிக்கு சென்று உண்ணாவிரதம் இருந்தார்.
தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட விஜய்காந்த்:
நமது மீனவர்களை சிங்கள கடற்படையினர் அடித்து கடலில் தூக்கிப்போடும் தைரியம் எங்கிருந்து வந்தது?. தமிழர்கள் இன்று அனாதைகளாகவும், ஆதரவற்றவர்களாகவும் விடப்பட்டுள்ளனர். விஜயகாந்த் தமிழர்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
மும்பையில் 166 பேரை பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொன்றுவிட்டதற்காக அந்த நாட்டோடு உறவை துண்டித்தீர்கள், பேச்சுவார்த்தையை நிறுத்தினீர்கள். இலங்கையில் 41,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்களே அதற்கு என்ன செய்தீர்கள்?.
ஊன்றுகோல் தான் கேப்டன்:
இவர்களுக்கெல்லாம் உறுதுணையாக ஊன்றுகோலாக ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி தருவதற்காகத்தான் கேப்டன் தலையிலான தேமுதிக இருக்கிறது.
நமக்கு என்று ஒரு வீடு இருந்தால்தான் பாதுகாப்பு. தங்களுக்கு என்று ஒரு நாடு இருந்தால்தான் தங்களின் துயரத்தை தீர்த்துக்கொள்ள முடியும். இதுபோல ஒரு இனத்தை காப்பாற்ற தனி நாடு என்பது தவிர்க்க முடியாது.
சொத்துக்களை எல்லாம் இழந்த தியாகசீலர் விஜய்காந்த்:
தங்கள் எதிர்காலத்திற்கு தனி ஈழம் என்று கேட்டால் அதை கொச்சைப்படுத்தலாமா? தமிழகத்தில் போராடுவதற்கு தகுதி பெற்ற தலைவர் எங்கள் கேப்டன் தான். தான் உழைத்து அதன் மூலம் சேர்த்து சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் இழந்து தியாகசீலராக தமிழ்நாட்டில் வலம் வருகிறார்.
நேர்கொண்ட பாதையில் சென்று கொண்டிருப்பார்...:
விஜயகாந்த் எங்கள் அணியில் சேரமாட்டாரா? உங்கள் அணியில் சேரமாட்டாரா? என்று யார் யாரோ கண் அசைத்து பார்கிறார்கள். காதல் மொழி பேசுகிறார்கள். கேப்டன் தனது நேர்கொண்ட பாதையில் சென்று கொண்டிருப்பாரே தவிர, என்றும் தடம் புரள மாட்டார். எது சரி என்றுபடுகிறதோ, அதை நிறைவேற்றுவதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவரைதான் நாம் பெற்றிருக்கிறோம்.
கேப்டன் ஆணையிட்டால்...:
அதேபோல யாரிடமும் கையேந்தாத கட்சி தொண்டர்களை நாம் பெற்றிருக்கிறோம். நமது தொண்டர்கள் கட்ட பஞ்சாயத்து நடத்துகின்றவர்கள் அல்ல. கேப்டன் ஆணையிட்டால் தங்களின் ரத்தத்தையே கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இதுதான் தேமுதிக
தீர்ப்பை ஸாரி தீர்வை சொல்லிவிட்டார் விஜயகாந்த்:
இந்திய, இலங்கை அரசுகள் தமிழக, இலங்கை கடல் பகுதியை சுதந்திரமாக மீன்பிடிக்கும் பகுதியாக அறிவிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் மீன்பிடித்து விட்டு போங்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?. இந்தத் தீர்வைத்தான் விஜயகாந்த் கடிதம் மூலம் பிரதமருக்கு சொல்லியிருக்கிறார் என்றார் பண்ருட்டி.












Click it and Unblock the Notifications