உத்தப்புரத்தில் கலவரத்தைத் தூண்டி அவப்பெயரை ஏற்படுத்த முயலுகிறது சிபிஎம்-கருணாநிதி

இதுதொடர்பான கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:
கேள்வி: மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் தலித் மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருவதோடு, தாங்களும் பலமுறை அதற்காக மாவட்ட கலெக்டரோடு கலந்து பேசி ஒரு சுமூகமான நிலை இருந்து வந்த நிலையில் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அங்கே போராட்டம் நடைபெற்றதாகவும், போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஏடுகளில் பெரிதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அரசுக்கு எதிர்ப்பு என்றால் உடனடியாக கண்டன அறிக்கை விடும் ஒரு சில கட்சிகளும் அறிக்கை விடுத்துள்ளனவே? உண்மை விவரம் என்ன?
பதில்: உத்தப்புரம் கிராமத்தில் இரண்டு தரப்பினருக்கிடையே உள்ள பிரச்சினையைக் களைவதற்காக - கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசின் சார்பில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அதற்காக நான் எத்தனை முறை மாவட்ட கலெக்டரோடு பேசியிருக்கிறேன் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். உத்தப்புரம் கிராமத்தில் வாழும் மக்களும் தற்போது எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களால் அவர்கள் அமைதியாக இருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மாதத்துக்கு ஒரு முறை அந்தக் கிராம மக்களைத் தூண்டிவிட்டு ஏதாவது பிரச்சினை செய்ய முடியாதா என்று பார்க்கிறார்கள்.
இதற்கோர், உதாரணம் கூற வேண்டுமேயானால், இந்தச் சம்பவம் நடந்த அதே நாளில் உத்தப்புரம் ஊராட்சி மன்றத்தலைவரும், வேறு சில தலைவர்களும் இணைந்து ஒரு பத்திரிகைக் குறிப்பையே ஏடுகளுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதில், "உத்தப்புரத்தில் கடந்த சில வருடங்களாக இரு சாதி மக்களிடையே தொடர்ந்து பிரச்சினை நிலவி வருவதாக சில அரசியல் கட்சிகள் விஷமப் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் உத்தப்புரம் கிராமத்தில் அனைத்துச் சாதியினரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ்ந்து வருகிறோம். சில அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காகவும், சுயநலத்துக்காகவும், உத்தப்புரம் கிராமத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் நல்ல முறையில் செய்து வருகிறது. எங்களுக்குள் சிற்சில பிரச்சினைகள் இருந்தாலும் அமைதியுடன் வாழ்ந்து வருகிறோம் என்பதுதான் உண்மை'' என்று எழுதி கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதிலிருந்து அந்தக் கிராம மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்த போதிலும் அங்கே ஒற்றுமை நிலவக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுபவர்கள் யார் என்பதை சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.
உத்தப்புரம் கிராமத்தில் பிரச்சினை தோன்றியவுடன் அரசு தலையிட்டு ஆதிதிராவிடர் அதிகமாக வசிக்கும் பகுதிக்குச் செல்லும் வண்ணம் 6-5-2008 அன்று சுவர் இடிக்கப்பட்டு, ஏற்கனவே இருந்த பஞ்சாயத்து சாலையை இணைத்திட பாதை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. விசாரணைக் குழு ஒன்றினை அமைத்து- பரிந்துரைகளைப் பெற்று 16-9-2009 அன்று, 191 பேருக்கு பத்து லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
அந்தக் கிராமத்தில் மட்டும் 1655 குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் - 80 குடும்பங்களுக்கு இலவச எரிவாயு அடுப்புகள் - 35 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் வெள்ளாள சமுதாய மக்கள் வாழும் வடக்குத் தெருவில் 39 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அத்தியாவசியப் பணிகளும், ஆதிதிராவிடச் சமுதாய மக்கள் வசிக்கும் தெற்குத் தெருவில் 73 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் அத்தியாவசியப் பணிகளும் நடைபெற்றுள்ளன.
உத்தப்புரம் கிராமத்தில் மட்டும் கடந்த ஆண்டு ரூ.57.21 லட்சத்தில் 44 பணிகள் முடிக்கப்பட்டும் - இந்த நிதி ஆண்டில் ரூ.55.15 லட்சம் மதிப்பீட்டில் 21 பணிகள் நடைபெற்றும் ஆகமொத்தம் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளன.
தலித் மக்களுக்கு ஆதரவாக தடுப்புச் சுவர் உடைக்கப்பட்ட காரணத்தால், வெள்ளாள சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தாழைiத்து மலையடிவாரத்தில் சென்று தங்கினார்கள். அதன் பின்னர் மதுரை மாவட்ட கலெக்டரும், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர்களையும், வெள்ளாள சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் பல முறை சந்தித்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன், சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் ஆகியோர் தலைமையில் 350 பேர் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக - உத்தப்புரத்தில் முத்தாலம்மன் கோவில் வளாகத்தினுள் உள்ள அரச மரத்தினை ஆதிதிராவிடர்கள் வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும்; முத்தாலம்மன் கோவிலுக்கு அருகில் பேருந்து நிழற்குடை அமைத்துத் தரவேண்டும்; நடைபாதையில் வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அவர்களின் ஆர்ப்பாட்டத்தை அலட்சியம் செய்யாமல்- அல்லது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல் - டி.கே.ரெங்கராஜன், நன்மாறன், மகேந்திரன் மற்றும் உத்தப்புரத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் பொதுமக்களை மாவட்ட கலெக்டர் தனது அறைக்கே அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
அந்தப் பேச்சுவார்த்தையின்போது மாவட்ட கலெக்டர், தான் அண்மையில்தான் அந்த மாவட்டத்தில் பொறுப்பேற்றுள்ளதாகவும், விரைவில் அதிகாரிகள் கொண்ட குழுவுடன் அந்தக் கிராமத்துக்குச் சென்று, அவர்கள் தெரிவித்த கோரிக்கைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். நடைபாதையைப் பொறுத்தமட்டில் எவ்வித இடையூறும் இன்றி வாகனங்கள் செல்ல உறுதி அளித்துள்ளார்.
மேலும், வெள்ளாளர் சமூகத்தினரால் கட்டப்பட்டுள்ள முத்தாலம்மன் கோயில் சுற்றுச் சுவரினுள் அமைந்துள்ள அரச மரத்தினை வழிபட ஆதிதிராவிடர் மக்களை அனுமதிப்பது என்பதை இரு தரப்பு மக்களுக்கிடையே ஒரு சுமூகமான உறவு ஏற்பட்டால்தான் இயலும் என்றும், தன்னிச்சையாக அனுமதி வழங்கினால் கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசால் திறந்துவிடப்பட்ட பொதுப்பாதையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இரண்டு சக்கர வாகனங்களில் செல்வதற்கும் மற்றும் ஆட்டோக்களில் செல்வதற்கும் எவ்விதத் தடையும் தற்போது இல்லை எனவும், பெரிய வாகனங்களான டிராக்டர் போன்றவை அப்பாதை வழியே செல்வதற்கு சற்று சிரமமாக உள்ளதாகவும், எனவே பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தையின்போது இந்த விவரங்களையெல்லாம் தெரிவித்தபோது - போராட்டத்தில் ஈடுபட்டு பேச்சுவார்த்தைக்காக வந்தவர்கள், அதனை ஏற்காமல் மாவட்ட கலெக்டர் உடனடியாக அந்தக் கிராமத்துக்குச் சென்று அன்று மாலைக்குள் கோரிக்கைகளையேற்று எழுத்து மூலமான அனுமதி வழங்க வேண்டுமென்று பிடிவாதமாகக் கூறினர்.
கூறியதோடு நிற்காமல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு முன்பாகவே பொதுமக்கள் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், முறைப்படி சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டி, வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
காவல்துறையினர் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டபோது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கீழே படுத்துக்கொண்டு கைதுக்கு முன்வராத காரணத்தால், காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முறையான விளக்கம் தரப்பட்ட பிறகும் வேண்டுமென்றே ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதால், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய துறைகளின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் - நான்தான் அவர்களை அன்றைய தினமே விடுவிக்கும்படி தெரிவித்து அவ்வாறே விடுவிக்கப்பட்டனர். இவர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தினால், அன்றைய தினம் மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பதால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு முறையீடு செய்ய வந்த பொதுமக்களுக்குத்தான் சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டதே தவிர வேறு எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.
இப்போது மாத்திரமல்ல; 12-9-2009 அன்று மறைந்த மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோகன், எனக்கு தொலைபேசி செய்து, அந்தக் கட்சியைச் சேர்ந்த பிருந்தாகரத், உத்தப்புரம் செல்ல முனைந்தபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்டதாகக் கூறியபோது - அந்தக் கிராமத்தில் இரு வகுப்பினரிடையே கசப்புகள் இருக்கிற காரணத்தால் காவல் துறையினர் முன்னெச்சரிக்கை செய்திருக்கக் கூடுமென்று சொல்லிவிட்டு, அடுத்த நிமிடமே மதுரை மாவட்ட கலெக்டரை தொலைபேசியில் அழைத்து அந்த அம்மையார் உத்தப்புரம் செல்ல அனுமதிக்கவேண்டுமென்று கூறி அவ்வாறே போலீஸ் பாதுகாப்புடன் அந்தக் கிராமத்திற்குச் சென்று வந்தார். ஆனால் அப்போதும் அந்த அம்மையார் கைது செய்யப்பட்டதாகவும் ஒலி பெருக்கி அனுமதி தரப்படவில்லை என்றும் அந்தக் கட்சியின் சார்பில் கூறப்பட்டது.
உத்தப்புரம் சுவர் அகற்றும் பிரச்சினையைப் பொருத்தவரையில் - 1988-ம் ஆண்டிலிருந்து பிரச்சினை இருந்து வந்த போதிலும் - கடந்த காலங்களில் ஜெயலலிதா ஆட்சியோ - கம்யூனிஸ்ட் கட்சிகளோ உத்தப்புரம் கிராமத்திலே இருந்த அந்தச் சுவரை அகற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதும், தி.மு.கழக ஆட்சியிலேதான் அந்தச் சுவர் அகற்றப்பட்டு, பாதை வசதி செய்து தரப்பட்டது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இன்னும் சொல்லப் போனால் கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் போன்ற கிராமங்களில் பல ஆண்டு காலமாக உள்ளாட்சி மன்றத் தேர்தல்களே நடத்த முடியாத நிலையில் முடக்கப்பட்டு கழக ஆட்சியிலேதான் அங்கே சுமூகமாக உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டு, அங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் சமுதாயத் தலைவர்களை சென்னைக்கே அழைத்து பாராட்டு விழா நடத்தப்பட்டதும் - அந்த விழாவிலே கலந்து கொண்டு தோழர் நல்லகண்ணு போன்றவர்கள் இந்த அரசைப் பாராட்டியதும் -கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு தற்போது சுலபமாக மறந்து விட்டது போலும்! ஆமாம், அவர்கள் எதை நினைத்தார்கள், இதை மறப்பதற்கு?
இவ்வளவுக்குப் பிறகு - போராட்டக்காரர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதாகவும், கொடுஞ்செயல் நடந்துவிட்டதாகவும், தடியடிப் பிரயோகம் நடைபெற்றதாகவும் சில பேர் அறிக்கை விடுகிறார்கள், கண்டனம் செய்கிறார்கள்.
அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையிலே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால் - அவர்கள் சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை பத்திரிகையாளர்களும், நாட்டு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விவரங்களை எல்லாம் தொகுத்துத் தந்துள்ளேன். இதிலிருந்து உத்தப்புரம் தலித் மக்களுக்காக இந்த ஆட்சியினர் பாடுபட்டுக்கொண்டிருப்பதுதான் உண்மையா? அல்லது இந்த ஆட்சிக்குக் கெட்ட பெயர் உண்டாக்க வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுச் செயலாற்றுகிறதா என்பதை நன்கு புரிந்து கொள்ளலாம்.
கேள்வி: கோவையில் ஜெயலலிதா கட்சியினர் கூட்டிய கண்டனப் பொதுக்கூட்டத்தில் விலைவாசி உயர்வைப் பற்றி குறிப்பிடும் போது, தி.மு.கழக அரசைத் திட்டி ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினார் என்றும், ஆனால் காங்கிரசைப் பற்றியோ, மத்திய அரசைப் பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் ஜெயலலிதாவின் ஆதரவுப் பத்திரிகை ஒன்றிலேயே தலைப்புச் செய்தி வெளிவந்திருக்கிறதே?
பதில்:- இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் அந்த அம்மையாரோடு கூட்டுச் சேர்ந்திருக்கிற இடதுசாரி கம்யூனிஸ்டுகள் அல்லவா? (கோவை கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருப்பதைப்பற்றி நாளை (இன்று) விரிவாக எழுதுகிறேன்.) என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications