ராணி மேரிக் கல்லூரியில் 'கலைஞர் மாளிகை'!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கல்விக் கண்ணை திறந்தவர் காமராஜர். அவருடைய சாதனைகளை தான் இன்னும் திமுக அரசால் தொடர்ந்து வருகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.3.2 கோடி செலவில் 'கலைஞர் மாளிகை' என்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

இந்தக் கல்லூரியை இடித்துவிட்டுத் தான் தலைமைச் செயலகம் கட்ட அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முயன்றார். இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகள் பெரும் போராட்டம் நடத்தினர்.

கல்லூரியில் போராட்டம் நடத்திய ஆசிரியைகள், மாணவிகளுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற மு.க. ஸ்டாலின் கைது செயயப்பட்டார்.

இந் நிலையில் இன்று இந்த புதிய கட்டடத் திறப்பு விழாவுக்குத் தலைமை வகித்து ஸ்டாலின் பேசுகையில்,

1914ம் ஆண்டில் 'கேப்பர் இல்லம்' என்ற பெயரில் இருந்த இது, பின்னர் மகளிர் கல்லூரியாக உருவானது. இந்தியாவில் முதன்முதலாக தோன்றிய 3 மகளிர் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். 1915ம் ஆண்டு இதன் அருகில் உள்ள இடங்களை வாங்கி இன்டர்மீடியட் வகுப்புடன் கல்லூரி தொடங்கப்பட்டது.

1916ம் ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கப்பட்டது. 1917ம் ஆண்டு முதல் ராணிமேரி கல்லூரி என்ற பெயரில் புகழும் சிறப்பும் மிக்கதாக இந்தக் கல்லூரி திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் கல்லூரியில் லட்சுமி மேனன், மரகதம் சந்திரசேகர், அனந்தநாயகி, ராஜம்மாள் தேவதாஸ், வசந்திதேவி உள்பட பல்வேறு கல்வியாளர்களும் முக்கிய அரசியல் பிரமுகர்களும் படித்துள்ளனர்.

இங்கு படித்த பலர் மத்திய, மாநில அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மேதைகளாகவும், தமிழ் அறிஞர்களாகவும், சுதந்திர போராட்ட வீரர்களாகவும் திகழ்ந்துள்ளனர்.

இந்தளவுக்கு பெருமைமிக்க இந்த கல்லூரியை இடித்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டபோது பலத்த எதிர்ப்பு குரல் கிளம்பியது. மாணவிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தை அடக்குவதற்கு அன்றைய அரசு பல முயற்சிகளில் ஈடுபட்டது. மாணவிகளுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. கழிவறையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் கல்லூரியை மூடிவிட்டு அங்கு பணியாற்றிய முதல்வரையும், பேராசிரியைகளையும் இடமாற்றம் செய்தனர்.

இதை எதிர்த்து போராடி இந்த மாணவிகள் வெற்றி கண்டனர். அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கு வந்த எங்களை கைது செய்து கடலூர் சிறையில் தள்ளினர். அந்த சிறைக்கும் ஆரம்பத்தில் 'கேப்பர் சிறை' என்றுதான் பெயர்.

இங்கு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்தக் கல்லூரி வளாகத்தில் சேதம் அடைந்துள்ள, பழுதான பழைய கட்டிடங்கள் இருப்பதை குறிப்பிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர் முன்மொழிந்த கோரிக்கையை துணை முதல்வர் என்ற முறையில் நான் வழிமொழிகிறேன்.

முதல்வர் நிச்சயம் இந்த கோரிக்கையை நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

கட்டிடத்தை திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று என் பெயரால் அமைந்துள்ள இந்த புதிய மாளிகையை திறப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். இங்கு துணை முதல்வர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் ஆற்றிய உரைகளை பார்க்கும்போது இந்த மாளிகை உருவாக்கப்பட்டதற்காக என்னை பாராட்டி வரவேற்க அழைத்ததுபோல தெரியவில்லை.

மேலும் சில உதவிகளுக்கு அச்சாரம் போடுவது போல இருந்தது அவர்களுடைய பேச்சு. இன்னும் இந்த கல்லூரி வளாகத்தில் பழைய கட்டிடங்கள் பல உள்ளன. அவற்றை மாற்றி புதிய கட்டிடங்களாக கட்டுவதற்கு உதவிகளை கேட்டு கோரிக்கை வைத்தார்கள்.

கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் மக்களுக்கு சரியான கல்வி தரப்படாமல் இருந்தது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி கிடைக்காத நிலை இருந்தது. அந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் கல்வி பயில்வதற்கு பதிலாக கஞ்சி கலையங்களை கையில் ஏந்தும் நிலை இருந்தது. இந்த நிலையை மாற்றுவதற்கு அரும்பாடுபட்டவர் பெருந்தலைவர் காமராஜர்.

காமராஜர் முதல்வராக இருந்தபோது ஒருமுறை சுற்றுப்பயணம் செய்தார். அப்போது வழியில் சில சிறுவர்கள் கையில் வெறும் கலசங்களை வைத்து கொண்டு துலாவி கொண்டிருந்தார்கள். உடனே காமராஜர் அங்கு காரை நிறுத்த சொல்லி சிறுவர்களிடம் பள்ளிக்கூடம் செல்லவில்லையா? என்று கேட்க அதற்கு அவர்கள் இங்கு பள்ளிக்கூடம் இல்லை என்று சொல்ல, பள்ளிக்கூடம் இருந்தால் நீங்கள் படிப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு சிறுவர்கள் சாப்பிட ஏதும் இல்லையே? என்றனர். சாப்பாடு இருந்தால் எல்லோரும் படிப்பார்கள் என்ற நம்பிக்கை அப்போது காமராஜருக்கு ஏற்பட்டது.

உடனே அன்றைய கல்வி அதிகாரி சுந்தரவடிவேலுவை அழைத்து ஆலோசனை செய்து பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

உணவு கொடுத்தாவது அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் என்று அவர் தொடங்கியது தான் மதிய உணவு திட்டம். பள்ளிகளில் மதிய உணவு கிடைத்ததால் ஏராளமானோர் கல்வி கற்கும் நிலை உருவானது. அதனைத் தொடர்ந்து கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.

காமராஜர் காலத்தில் கிராமங்களில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால் திமுக அரசு அந்த பள்ளிகளை எல்லாம் இணைக்கும் வகையில் ஏராளமான கல்லூரிகளை அமைத்தது.

கல்வி கற்பதற்கு பல்வேறு வசதி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் மூல காரணமாக விளங்கிய பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான சட்டத்தையும் இயற்றினோம்.

சென்னையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரி தான் தமிழகத்தில் பெண்களுக்காக அமைந்த முதல் கல்லூரி. இக்கல்லூரி இன்று வரை பெயரோடும், புகழுடனும் திகழ்ந்து வருகிறது.

ராணி மேரி கல்லூரியில் ஒரு சம்பவம் நடந்தது (இடிக்க முயற்சி-மாணவிகள் போராட்டம்) பற்றி எனக்கு தெரிந்ததும் அதை பற்றி விசாரிப்பதற்காக மு.க. ஸ்டாலின், பொன்முடி உள்பட சிலரை நான் அனுப்பி வைத்தேன். அவர்கள் போராட்டம் எதுவும் நடத்தவில்லை. அன்றைய ஆட்சி கல்லூரி கட்டிடத்தை இடிப்பதை எதிர்த்து போராடி மாணவிகளுக்கு ஆறுதல் சொல்லத்தான் சென்றார்கள்.

ஆனால், அப்போதைய ஆட்சி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. எதையும் அடக்குமுறையால் சாதித்து விடலாம் என நினைப்பது ஒரு ஆட்சிக்கு அழகாகாது. இந்த அரசு எந்த பிரச்சனைகளையும் தீர்க்கும் வகையிலேயே நடந்து கொள்கிறது.

கல்வி வளரவும், அறிவும் தழைக்கவும் அதற்குரிய வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இக்கல்லூரியில் உள்ள வசதிகள் போதாது என்று துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தெரிவித்துள்ளனர். திமுக அரசை பொறுத்தவரை கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்தி வருகிறது. என்னென்ன தேவைகள் என்பதை பட்டியலிட்டால் கல்விக்கு செலவிட இந்த அரசு ஒருபோதும் தயங்காது என்பதை உறுதியுடன் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் பங்கேற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+