அண்ணாமலை பல்கலை. நிர்வாக சீர்கேடு-அரசு நவடிக்கை எடுக்க சி.பி.எம். கோரிக்கை
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதிப்பற்றாக்குறை என்று கூறி ஆசிரியர், ஊழியர்களுடைய வைப்பு நிதி, ஓய்வூதிய நிதி ஆகிய கணக்கிலிருந்து சுமார் ரூ. 50 கோடிக்கு மேல் ஊதியம் மற்றும் செலவினங்களுக்காக எடுத்துச் செலவிடப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து அக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ஓய்வு பெற்று 9 ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆனால், அவருக்கு தொடர்ந்து பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகின்றது.
அவருக்கு தொடர்ந்து பதவி நீடிப்பு அளிக்கக் கூடாது என்றும், பல்கலைக்கழகத்தில் உள்ள நிர்வாகக் கோளாறுகளை போக்க கோரியும் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கங்கள் போராடி வருகின்றனர். போராடும் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூகமான தீர்வு காண்பதற்குப் பதில் போராட்டத்தை ஒடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் பல முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த முறைகேடுகள் குறித்து கடந்த 2009-ம் ஆண்டு யு.ஜி.சி. ஒரு விசாரணை நடத்தி முறைகேடுகளை களைந்திட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்தைப் பணித்தது.
ஆனால், பல்கலைக்கழக நிர்வாகமோ யு.ஜி.சி.யினுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ள எந்த குறைபாடுகளையும் போக்க இன்று வரை முன்வரவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் கல்விக் கட்டணத்தை பல்கலைக்கழக நிர்வாகம் 5 முதல் 8 மடங்கு உயர்த்தியுள்ளது.
அரசு நிதி உதவி பெறும் பல்கலைக்கழகமாக இருந்தாலும் சரி, சுயநிதி கல்வி நிறுவனங்களைப் போல் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக மாணவர், ஆசிரியர், ஊழியர்களை சேர்க்கும் முறைகேடுகளும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.
நிதிப்பற்றாக்குறை என்று கூறி ஆசிரியர், ஊழியர்களுடைய வைப்பு நிதி, ஓய்வூதிய நிதி ஆகிய கணக்கிலிருந்து சுமார் ரூ. 50 கோடிக்கு மேல் ஊதியம் மற்றும் செலவினங்களுக்காக எடுத்துச் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது.
மேலும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பணப்பயன்கள் அளிக்கப்படாத நிலைமையும் உள்ளது.
நிர்வாக கோளாறினாலும், முறைகேட்டினாலும் மிகப் பெரிய நெருக்கடிக்கு உள்ளாகி, ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தின் எதிர் காலமே கேள்விக் குறியாகும் அபாயம் உள்ளது.
எனவே, பல்கலைக்கழக நிர்வாகத்தின் முறைகேடுகளைத் தடுக்கவும், நிர்வாகக் கோளாறுகளைக் களையவும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
