ஆடிப் பெருக்கு: காவிரிக் கரையோரம் கரைபுரண்டோடிய உற்சாகக் கொண்டாட்டம்
தமிழகத்தில் பொது மக்கள் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடும் பண்டிகைகளில் ஆடிப் பெருக்கு விழாவும் ஒன்று. அதிகாலை நேரத்தில் எழுந்து குடும்ப சகிதமாக காவிரிக்கு சென்று, அங்கு நல்லெண்ணெய் தேய்த்து நீராடுவார்கள்.
பின்பு தேங்காய், பழங்கள் வைத்தும், பெண்கள் தாங்கள் அணிந்துள்ள தாலி, தோடு, வளையல் போன்றவற்றை வைத்தும் சூடம் சாம்பிராணி காட்டி பயபக்தியோடு சாமி கும்பிடுவர்.
வளம் பெருக ஆண்கள் கையில் மஞ்சள் கயிறும், பெண்கள் தங்களது தாலிச் சரடில் புதிய மஞ்சள் கயிறும் கட்டிக் கொண்டனர்.
இது புதுமணத் தம்பதியருக்கான சிறப்பு விழாவும் கூட. புது மணப்பெண்கள் தங்களது தாலிக் கயிறுகளை இன்று மாற்றிக் கொள்வார்கள்.
மேலும், 7 தினங்களுக்கு முன்பு 9 வகையான நவதானியங்களை மணல், மண், சானம் ஆகியவற்றில் ஊற வைப்பர். அதை ஒவ்வொரு நாளும் நீர் விட்டு சிறுது நேரம் வெயிலில் வைத்து பாதுகாப்பார்கள். அது தற்போது தளதள என வளர்ந்து செழித்து இருந்தது. இதை முளைப்பாரி என்கின்றனர். இந்த முளைப்பாரியை அவர்கள் ஆற்றில் கரைத்து விட்டு வீட்டுக்கு சென்றனர்.
இந்த விழாவை முன்னிட்டு காவிரி நதியோரம் நாள் முழுவதும் மக்கள் கூட்டம் அலை மோதியது.
திருச்சி அம்மா மண்டபத்தில் ஆடிப் பெருக்கையொட்டி மக்கள் கூட்டம் அலை மோதியது. அதேபோல ஈரோட்டிலும் பவானி கூடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் ஆடிப்பெருக்கை விசேஷமாக கொண்டாடினர்.













Click it and Unblock the Notifications