கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை-ராஜ் தாக்கரே குறித்து ஆஷா போன்ஸ்லே மறைமுக சாடல்

ராஜ் தாக்கரேவைத்தான் ஆஷா இவ்வாறு கொசுத் தொல்லை என்று மறைமுகமாக சாடியுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
மும்பையில் குடியேறியுள்ள வெளி மாநிலத்தவர்களால்தான் மும்பையில் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன என்று சமீபத்தில் பேசியிருந்தார் ராஜ் தாக்கரே. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
இந்த நிலையில் ஆஷா போன்ஸ்லே அனுப்பியுள்ள ட்விட்டர் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆஷாவின் ட்விட்டர்செய்தி..
மும்பை-மச்சார் (கொசு) போர் முழு வீச்சில் உள்ளது. கவனமாக இருக்கவும்.
இதையடுத்து இன்னொரு ட்விட்டர் செய்தியை அனுப்பியுள்ளார் ஆஷா. அதில் மச்சார் ராஜ் (கொசுக்களின் ராஜ்ஜியம் என்று அர்த்தம் வரும் வகையில்) என்று குறிப்பிட்டுள்ளார் ஆஷா.
ஆனால் ராஜ் என்று ஆஷா கூறியிருப்பது ராஜ் தாக்கரேவைத்தான் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. மலேரியா குறித்து ராஜ் தாக்கரே கூறிய கருத்துக்களை நிராகரிப்பது போல மறைமுகமாக ராஜ் தாக்கரேவை வாரியுள்ளார் ஆஷா என்று கூறப்படுகிறது.
ஆனால் இதை உடனடியாக மறுத்து விட்டார் ஆஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ராஜ் தாக்கரேவை குறிப்பிட்டு சொல்லவில்லை. எங்கு பார்த்தாலும் கொசுத் தொல்லையாக இருக்கிறது. இங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் இதே பிரச்சினைதான். அதைத்தான் நான் கூறியிருந்தேன். மற்றபடி இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார் ஆஷா.
இதை பிரச்சினையாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் ஆஷா.
ஆஷா சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாட்டில் 'கொசுக்களின்' அட்டகாசம் உண்மையிலேயே தாங்க முடியாத அளவுக்குத்தான் உள்ளது!












Click it and Unblock the Notifications