இயேசுவுடன் கருணாநிதியை ஒப்பிட்ட திமுக எம்.எல்.ஏ அப்பாவு-கண்டித்து 9-ம் தேதி ஆர்பாட்டம்
தூத்துக்குடி: இயேசு நாதரை, முதல்வர் கருணாநிதியுடன் ஒப்பிட்டுப் பேசி, கிறிஸ்தவ மதத்தினரை இழிவுபடுத்தியதாக தி.மு.க. எம்.எல்.ஏ. அப்பாவுவை கண்டித்து, ராதாபுரத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மீனவ மக்கள் கட்சித் தலைவர் அலங்கார பரதர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் மீனவ மக்கள் கட்சித் தலைவர் அலங்கார பரதர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ. அப்பாவு, சமீபத்தில் தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், இயேசு நாதரும் முதல்வர் கருணாநிதியும் ஒன்றுதான். எனவே, இயேசுவின் பெற்றோருக்கு அளிக்கப்படும் மரியாதையைப் போல, நாம் முதல்வர் கருணாநிதியின் பெற்றோருக்கும் அளிக்க முன்வர வேண்டும்.
அதனால் தான், முதல்வர் கருணாநிதியின் பெற்றோர் சிலை ராதாபுரம் பஸ் நிலையத்தில் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் இயேசுவுடன், கருணாநிதியை ஒப்பிட்டு பேசியது, கிறிஸ்தவ மதத்தினரை இழிவுபடுத்தும் செயல். எனவே, அப்பாவு எம்.எல்.ஏ. மீது முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப் பிரச்னை தொடர்பாக ஏற்கனவே நெல்லை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளோம்.
மேலும், எம்.எல்.ஏ. அப்பாவு-வை கண்டித்து வரும் 9-ம் தேதி கிறிஸ்தவ மக்கள் சார்பில், ராதாபுரம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications