For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'வாய்தா ஜெயலலிதாவை' கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை : சொத்துக் குவிப்பு வழக்கில், தொடர்ந்து வாய்தா வாங்கி வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெங்ககளூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா வாங்கி வருகிறார் ஜெயலலிதா. இதைக் கண்டித்து அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் கலெக்டர்அலுவலகம் அருகே பிரமாண்ட பேரணியுடன் திமுக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சென்னை மேயர் மா.சுப்ரமணியமும் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், 1997ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை முடிக்க விடாமல் தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளாக வாய்தா வாங்கி வருகிறார் ஜெயலலிதா.

ஆனால் இதை மறைத்து மக்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக அரசு மீது தொடர்ந்து பொய்யான புகார்களை அவர் கூறி வருகிறார். இதைக் கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.

கரூரில்...

கரூரில், இன்று காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கரூர் பேருந்து நிலையம் அருகில் கரூர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் எம்.பி.யும், திமுக சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினருமான கே.சி. பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சின்னசாமி, மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

மேலும், கரூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றதால் பேருந்து போக்குவரத்து சில மணி நேரம் முடக்கப்பட்டது.

நாகர்கோவிலில்...

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

அதே போல கோவை, மதுரை,திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் திமுக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரையில் மேடை சரிந்து மேயர் காயம்:

மதுரையில் திமுகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது மேடை சரிந்ததில் மாநகராட்சி மேயர் தேன்மொழி மற்றும் சிலர் காயமடைந்தனர்.

மதுரை தல்லாகுளம் தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேயர் தேன்மொழி, துணைமேயர் மன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பட்டன. ஆர்ப்பாட்ட மேடையில் திமுக நிர்வாகிகள் பலர் ஏறியதால், மேடை சரியத் தொடங்கியது. இதில் மேயர் தேன்மொழி மற்றும் துணை மேயர் மன்னன் மற்றும் பலர் நிலைதடுமாறினர். மேடை சரிந்ததில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பட்டடம் முடித்துக் கொள்ளப்பட்டது.

போராட்டத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு:

முன்னதாக ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக இளைஞர் அணி நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை மறுத்துவிட்டது.

பழனி ஆயக்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவர் இது தொடர்பாக தாக்கல் பொது நல மனுவில்,

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவர் தொடர்ந்து வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிப்பதாகவும், அதை எதிர்த்து திமுக இளைஞர் அணி சார்பில் 4ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சட்டரீதியாகத் தான் தீர்வு காண வேண்டுமே தவிர பொது இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

இதுபோன்ற போராட்டங்களை நீதித்துறை அனுமதித்தால் நீதிமன்றத்தின் மீது உள்ள மதிப்பு, மரியாதை கேள்விக்குறியாகிவிடும். ஜெயலலிதாவை காரணமாக வைத்து போராட்டம் நடத்துவது நீதிபதியை குற்றம் சாட்டுவது போன்றதாகும். எனவே திமுக நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.சுகுணா, சி.எஸ்.கர்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விவாதம்:

மனுதாரின் வழக்கறிஞர் சங்கர்கணேஷ்: திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்படும் இந்தப் போராட்டம் நீதிமன்ற நடவடிக்கையில் குறுக்கிடுவது போன்றதாகும். வழக்கில் வாய்தா கொடுப்பதும் மறுப்பதும் நீதிமன்றத்தின் உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. வாய்தா கேட்பவரை குற்றம்சாட்டுவது சம்பந்தப்பட்ட நீதிபதியை குற்றம் சாட்டுவது போலாகும். இது நீதிமன்ற அவமதிப்பு. எனவே திமுக இளைஞரணி நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

திமுக இளைஞரணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வீராகதிரவன்: ஜெயலலிதா மீதான வழக்கை தினமும் விசாரித்து விரைவில் முடிக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். 13 வருடங்களாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. வாய்தா கேட்டு வழக்கை இழுத்தடிப்பதை கண்டிக்கிறோமே தவிர நீதிமன்றத்தை குறை கூறவில்லை.

அரசு கூடுதல் வழக்கறிஞர் அட்வகேட் ஜெனரல் ராமசாமி: ஜெயலலிதா மீதான வழக்கு கர்நாடக மாநிலத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதை எதிர்த்து தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துவதால், நீதிமன்ற நடவடிக்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த மனுவில் பொதுநலன் எதுவும் இல்லை. விளம்பரத்திற்காகவும், அரசியலுக்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் மனுதாரருக்கு உச்சபட்ச அபராதம் விதிக்க வேண்டும்.

இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து ஜெயலலிதாவுக்கு ஆதரவான இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

தங்கள் உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது: இந்த வழக்கை பொறுத்தவரை முக்கியமான அம்சம் திமுக இளைஞரணி நிறைவேற்றியுள்ள தீர்மானம் தான். அதை பார்க்கும்போது 13 வருடங்களாக அந்த வழக்கில் வாய்தா வாங்குபவர்களை கண்டித்து தான் போராட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

முன்னாள் முதல்வரின் நடவடிக்கைகளை எதிர்த்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. வாய்தா வாங்குவதை மக்களின் கவனத்திற்கு எடுத்து செல்கிறோம்' என்று அவர்கள் கூறுகின்றனர். இதை நீதிமன்ற அவமதிப்பாக கூறமுடியாது. மேலும் அந்த வழக்கு கர்நாடகத்தில் நடந்து வருகிறது.

அந்த வழக்கில் வாய்தா வாங்குவதை எதிர்த்து தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துவது நீதிமன்ற நடவடிக்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே நீதிமன்றம் கருதுகிறது.

பொதுநல வழக்குகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சில வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதன்படி பார்த்தால் இதை பொதுநல வழக்காக ஏற்க முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினர்.

இதையடுத்து திட்டமிட்டபடி திமுக போராட்டம் நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X