கடன் வேண்டுமா என்று கேட்டு வந்த தொலைபேசி அழைப்பு-பிரணாப் எரிச்சல்

அப்போதுதான் உட்கார்ந்து 'டிரவுசரை' கழற்றியிருப்போம். வீறிட்டு கதறும் நமது செல்போன். 'பாஸ்' கூப்பிடுகிறாரோ என்று அவசரம் அவசரமாக பாய்ந்தோடி வந்து செல்லை எடுத்து செவியில் வைத்தால், குட்மார்னிங், காலிங் ஃபிரம் ஏபிசிடிஇஎப்ஜி பேங்க், வீ ஆஃபர் ஹவுசிங் லோன்ஸ்... என்று ஒரு 'அக்கா' அழகாக பேசுவார். அவர் அழகாகத்தான் பேசுவார், ஆனால் நமது அவசரம் புரியாமல்.
இப்படி ஒரு இன்ப சித்திரவதையை இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் தினசரி பலமுறை அனுபவிக்க நேரிடுகிறது. இந்த அவஸ்தை இப்போது இந்தியாவுக்கே கடன் தரும் பிரணாப் முகர்ஜிக்கும் வந்து விட்டது.
படு டென்ஷனான சூழ்நிலையில் மிக முக்கியமான கூட்டத்தில் அமர்ந்திருந்தபோது இப்படி ஒரு போன் வந்து பிரணாபை டென்ஷனாக்கி விட்டதாம்.
விலைவாசி உயர்வுப் பிரச்னை தொடர்பாக கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இப் பிரச்னைக்குத் தீர்வு காண எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை காலை ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
படு சூடான அந்த சூழலில், திடீரென பிரணாபின் செல் அடித்துள்ளது. சோனியாதான் கூப்பிடுகிறாரோ என்னவோ என்று அடித்துப் பிடித்து செல்லை ஆன் செய்து காதில்வைத்துள்ளார். அடுத்த செகன்ட் அவரது முகத்தில் கடும் கோபம் கொப்பளித்தது. சத்தமான குரலில், இல்லை, இல்லை, இப்போது மிக முக்கியமான கூட்டத்தில் இருக்கிறேன் என்று கூறியபடி அருகில் உட்கார்ந்திருந்த அமைச்சர் நாராயணசாமியிடம் செல்லை வேகமாக கொடுத்தார்.
என்னாச்சு என்று அனைவரும் குழம்ப பிரணாபே அழாத குறையாக, வீடு கட்ட கடன் தருகிறோம் என ஏதோ ஒரு நிதி நிறுவனத்தின் பிரதிநிதி கூறுகிறார். இப்படி நாலு அல்லது ஐந்து முறை போன் வருகிறது. பெரிய தலைவலி என்று கடுப்புடன் கூறினாராம்.
இவருக்காவது ஒரு நாளைக்கு 5 முறைதான் வருகிறது. அப்பாவி மக்களோ அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இப்படிப்பட்ட கால்களை கேட்க நேரிடுகிறதே, அதை எங்கு போய்ச் சொல்ல...
கொல்கத்தாவுக்கே இப்படி ரசகுல்லா கொடுத்த வங்கி எது என்று தெரியவில்லை.
இவராவது பரவாயில்லை, சமீபத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானிக்கும் இதுபோல சமீபத்தில் ஒரு போன் வந்தது. அதில் பேசிய பெண், வீடு கட்ட கடன் வேண்டுமா எனக் கேட்டாராம்.












Click it and Unblock the Notifications